சென்னை:

காவிரி நீர் பங்கீடு தொடர்பாக மேல்முறையீட்டு வழக்கில் தமிழக அரசுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த நீரின் அளவை குறைத்து உச்சநீதி மன்றம் தீர்ப்பு கூறியது.

இதற்கு தமிழக அரசியல் கட்சியினர், விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், காவிரி விவகாரத்தில் தமிழக அரசு, அடுத்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்து முடிவு செய்ய இன்று அனைத்து கட்சி கூட்டத்திற்கு  தமிழக அரசு ஏற்பாடு செய்தது.

அதன்படி இன்று காலை 10:30 மணிக்கு சென்னை, தலைமை செயலகத்தில் உள்ள, நாமக்கல் கவிஞர் மாளிகையில் முதல்வர் பழனிசாமி தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் தொடங்கியது.

இந்த கூட்டத்தில், முதல்வர் பழனிசாமி , துணை முதல்வர் பன்னீர்செல்வம், அமைச்சர்கள், எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின், துரைமுருகன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முத்தரசன், தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், சட்டசபை காங்கிரஸ் கட்சி தலைவர் ராமசாமி, மதிமுக பொது செயலர் வைகோ, தமிழக பா.ஜ., தலைவர் தமிழிசை, மார்க்சிஸ்ட் கட்சியின் ஜி.ராமக்கிருஷ்ணன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், தேமுதிக சார்பாக சுதீஷ்,  தமிழ் மாநில காங்கிரசு கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன், ஞான தேசிகன், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, கலி.பூங்குன்றன், எம்.ஏல்.ஏக்கள் தனியரசு, தமிமுன் அன்சாரி, கருணாஸ் உள்பட பலர் பங்கேற்றுள்ளனர்.

மேலும், தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு, அனைத்து விவசாயிகளின் ஒருங்கிணைப்புக் குழுத்தலைவர் பி.ஆர்.பாண்டியன் உள்பட 30 அரசியல்  கட்சியைச் சேர்ந்த பிரதிநிதிகள், மற்றும் 9 அமைப்பை சேர்ந்த நிர்வாகிகள், 14 விவசாய சங்கங்களை சேர்ந்தவர்கள்  இன்றைய கூட்டத்தில் கலந்துகொண்டு தங்களது கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

தமிழக அரசு சார்பாக  11 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போதுதான் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

இந்த கூட்டத்தில் கலந்துகொள்ள நடிகர் கமலஹாசன் மற்றும் டிடிவி தினகரனுக்கு அழைப்பில்லை.