காலா படத்தை கர்நாடகாவில் தடை செய்ய இருப்பதாக தகவல் வெளியான நிலையில்  படத்தை தடை செய்ய நீங்கள் யார் என்று நடிகர் பிரகாஷ் ராஜ் ஆவேசமாகக் கேள்வி எழுப்பி யுள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கியுள்ள படம், “காலா” . வரும் 7-ம் தேதி படம் வெளியாக இருக்கிறது. காவிரி பிரச்னையில் தமிழகத்துக்கு ஆதரவாக ரஜினிகாந்த் பேசியதாகக் கூறி, கன்னட அமைப்புகள் “காலா”  படத்தை கர்நாடகாவில் வெளியிட விட மாட்டோம் என்று கூறியுள்ளன. இதற்கு கர்நாடக தயாரிப்பாளர் சங்கமும் ஆதரவு தெரிவித்தது. முதல்வர் குமாரசாமியும் இதில் தலையிட முடியாது என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் நடிகர் பிரகாஷ் ராஜ் கூறியிருப்பதாவது:

“ஒரு மூத்த நடிகர் மற்றும் அரசியல் தலைவராகக் வெளிப்பட்டிருக்கும் நடிகர் ரஜினிகாந்த் கருத்து சொல்லும்போது மிகவும் கவனமாக இருக்கவேண்டும். ஆனால் ஒரு திரைப்படம் தடைசெய்யப்படுவது குறித்துதான் கவலைகொள்கிறேன்.

காலா என்பது ரஜினி மட்டும் தொடர்புடைய விசயம் கிடையாது. அவருடன் நடித்த நடிகர்கள் முதல் விநியோகஸ்தர் வரை அனைவரும் பாதிக்கப்படுகின்றனர். பிரச்னைக்கு இதுதான் தீர்வா?

அனைவருக்கும் போராட உரிமை உள்ளது. ரஜினிகாந்துக்கு எதிர்ப்பு தெரிவிக்க நினைத்தால் திரைப்படத்தை மக்கள் பார்க்காமல் இருக்கலாம். அப்படிச் செய்தால்தான் மக்கள் எதிர்க்கிறார்களா என்பது  தெரியும்.

பெரும்பான்மை மக்களுக்கு என்ன தேவை என்பதை வெகு சிலரே தீர்மானிக்கின்றனர். அப்படி இருக்கக் கூடாது. சில விளிம்புநிலை அமைப்புகள் என்னை கன்னட எதிரி என கூறலாம். அதற்காக என் கருத்தைக் சொல்லக்கூடாது என்பது கிடையாது. தவறு தவறுதான். அதை நாம் வெளிப் படையாக தெரிவிக்க வேண்டும்.  போராட்டகாரர்கள் என்ன செய்கிறார்கள்? அவர்கள் வந்து பொதுவிடத்தில் பிரச்னை ஏற்படுத்துகின்றனர்.

நாட்டின் குடிமகன் என்கிற முறையில் எனக்கு தேர்ந்தெடுக்கும் உரிமை இருக்கவேண்டும். ரஜினி படத்தை பார்ப்பதா இல்லையா என்பதை நான்தான் முடிவு செய்யவேண்டும். தடை செய்வதற்கு நீங்கள் யார்?” என்று பிரகாஷ்ராஜ் கேள்வி எழுப்பியுள்ளார்.