உச்சநீதி மன்றத்தை மிரட்ட நீங்கள் யார்? பாஜ தலைவருக்கு கேரள முதல்வர் கேள்வி

திருவனந்தபுரம்:

பரிமலை விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தை அச்சுறுத்த  நீங்கள் யார் என பாஜக தலைவர் அமித்ஷாவுக்கு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கேள்வி எழுப்பியுள்ளார்.

சமீபத்தில் கேரள மாநிலம் கன்னூரில் பாஜக அலுவலகத்தை திறந்துவைத்துப் பேசிய அமித்ஷா, சபரிமலை விவகாரத்தில் மத நம்பிக்கைக்கும், கேரள அரசின் கொடுமைக்கும் இடையே போராட்டம் நடந்து வருவதாகவும், பாஜக தொண்டர்கள் கைது செய்யப்பட்டு வருவதாகவும் குற்றம் சாட்டினார்.

அமித்ஷா – பிரனாயி விஜயன்

நீதிமன்ற தீர்ப்பை காட்டி மாநில அரசு  வன்முறையை உருவாக்க முயல வேண்டாம். ஐயப்ப பக்தர்களின் நம்பிக்கையை மாநில அரசு புண்படுத்த நினைக்க கூடாது. சபரிமலை பக்தர்களோடும் அவர்களது நம்பிக்கையோடும் பாஜக என்றும் துணை நிற்கும். இந்தியாவில் பல கோயில்களில் பலவிதமான விதிகளும், வழிபாடுகளும் உள்ளன என்பதை, கோர்ட் உத்தரவின்பேரில் சபரிமலை கோயிலுக்கு சென்று வன்முறையை தூண்ட நினைத்தவர்களுக்கு சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.

சபரிமலையில் எப்படி பெண்களுக்கு அனுமதி இல்லையோ அதேபோல் இந்தியாவில் பல கோயில்களில் ஆண்களுக்கும் அனுமதி இல்லை என்று பேசியிருந்தார்.

இதற்கு கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார். சபரிமலை விவகாரத்தில் உச்சநீதி மன்றத்தை அச்சுறுத்த  நீங்கள் யார் என அமித்ஷாவுக்கு  கேள்வி எழுப்பினார். மேலும், அமித்ஷாவின் பேச்சு அரசியல்  சாசனத்திற்கு எதிராக உள்ளதாக குற்றம் சாட்டினார.

உச்சநீதிமன்றம் பாபர் மசூதி வழக்கை விசாரித்துவரும் நிலையில் தங்கள் விருப்பப்படி தீர்ப்பு வழங்க வேண்டுமெனக் கூற முடியுமா என்றும் அமித்ஷாவுக்கு  கேள்வி எழுப்பிய கேரள முதல்வர்,  இது, நாட்டை ஆட்சி செய்து வரும் ஆளும் கட்சியின் தலைவனிடமிருந்து வரும் வார்த்தைகளா? அத்தகைய ஜனநாயக விரோத நிலைப்பாட்டை ஆளும் கட்சியின் தலைவர் ஏற்றுக் கொள்ள முடியுமா? பாஜகவிற்கு கேரளாவில் என்றும் இடமில்லை என்றும் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published.