புதுடெல்லி: மத்திய அரசிடம் அந்த 3 புதிய வேளாண் சட்டங்களை யார் கேட்டது? என்று காட்டமாக விமர்சித்துள்ளனர் வீரம் செறிந்த & எழுச்சி மிகுந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பஞ்சாப் விவசாயிகள்.

விவசாயிகளின் நீண்டகால கோரிக்கைகளை நிறைவேற்றும் நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டுமென்றும் அவர்கள் கோரியுள்ளனர்.

அதேசமயம், இந்த அரசு கார்ப்பரேட் நிறுவனங்களின் நலனில் மட்டுமே அக்கறை செலுத்துகிறது என்றும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

கடந்த 1976ம் ஆண்டு, மத்திய அரசு கொண்டுவந்த ‘ஒரு நாடு ஒரு சந்தை’ என்ற சட்டத்திற்கு எதிராக மிகப்பெரிய போராட்டத்தை தாங்கள் முன்னெடுத்ததை குறிப்பிட்டனர் விவசாயிகள்.

அந்த சட்டத்தின்படி, கோதுமையை, பஞ்சாப் மாநிலத்தை விட்டு வெளியில் கொண்டுசெல்ல முடியாது என்று குறிப்பிட்ட அவர்கள், அதனை எதிர்த்து 1450 விவசாயிகள் சிறை சென்றதாகவும், இறுதியாக, 1977ம் ஆண்டு அமைந்த மத்திய அரசால் அந்த சட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டு, ஒட்டுமொத்த நாடும் ஒரே மண்டலம் என்று அறிவிக்கப்பட்டதை நினைவு கூர்ந்தனர் அவர்கள்.