கொரோனா நீண்ட காலம் இருக்கப்போகிறது – உலக சுகாதார அமைப்பின் இயக்குநர்

--

ஜெனிவா:

கொரோனா நீண்ட காலம் இருக்கப்போகிறது என்று உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் டெட்ராஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கொரோனா நம்முடன் அதிக நாட்கள் இருக்கப்போவதால் நாம் கடக்க வேண்டிய தொலைவு நீண்டதாக இருக்கும் என்று உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் டெட்ராஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார். கொரோனா தொற்று சில நாடுகளில் குறைந்துவரும் நிலையில், மீண்டும் தொற்று கிளர்வதற்கான வாய்ப்புகள் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.


ஆப்ரிக்கா, மத்திய மற்றும் தென் அமெரிக்கா மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் கொரோனா தொற்று அதிகரிப்பது கவலையடைய வைப்பதாக டெட்ராஸ் கூறினார். கொரோனா வைரஸ் நம்முடன் நீண்ட காலம் இருக்கப்போவதால், நாம் செல்ல வேண்டிய தொலைவு அதிகம் என்று கூறிய டெட்ராஸ், பல நாடுகள், தொற்று பரவலைக் கட்டுப்படுத்த முயன்றாலும் அது மிக அபாயகரமானதாகவே இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.


வீட்டுக்குள் இருக்கும்போது மக்களுக்குச் சலிப்பும் ஏமாற்றமும் ஏற்படக்கூடும் என்றும், ஆனால் அவர்கள் வெளியே சென்றால் அவர்களின் உயிர், ஆபத்துக்குள்ளாவதைப் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் டெட்ராஸ் கூறியுள்ளார். கொரோனா தொற்றால் பாகுபாடு காட்டப்படுவதாக வரும் தகவல்கள் கவலையடைய வைப்பதாகவும், ஒன்றிணைந்து போராட வேண்டிய நேரத்தில் எந்தப் பாகுபாட்டுக்கும் இடம் அளிக்கக்கூடாது என்றும் டெட்ராஸ் வலியுறுத்தியுள்ளார்.

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,716,388 ஆக உயர்ந்துள்ளது. ஒரு நாளில் மட்டும் 80 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் உலகம் முழுவதும் 190,499 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று ஒரு நாளில் மட்டும் 6,572 பேர் உயிரிழந்துள்ளனர்.

உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 745,343 பேர் இதுவரை குணமாகி வீடு திரும்பி உள்ளனர். இன்று காலை நிலவரப்படி 56,678 பேர் உடல் நிலை மோசமடைந்து உலகம் முழுவதும் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்கள். 1,721,868 பேர் நல்ல உடல் நலத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

உலகிலேயே நேற்று அதிகபட்சமாக அமெரிக்காவில் கொரோனாவால் ஒரே நாளில் 2,325 பேர் உயிரிழந்தனர். இதன் காரணமாக அமெரிக்காவில் கொரோனாவால் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 49,845 ஆக உயர்ந்துள்ளது. இத்தாலியில் நேற்று மட்டும் 464 பேர் உயிரிழந்தனர். இதனால் அங்கு கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 25,549 ஆக உயர்ந்துள்ளது.


கொரோனாவால் மோசமாக பாதிக்கப்பட்ட ஸ்பெயின் நாட்டில் நேற்று மட்டும் 440 பேர் இறந்த நிலையில் இதுவரை மொத்தமாக 22,157 பேர் கொரோனா தொற்றால் இறந்துள்ளார்கள். பிரான்ஸ் நாட்டில் நேற்று மட்டும் 516 பேர் உயிரிழந்ததால் அங்கு பலி எண்ணிக்கை 21,856 ஆக அதிகரித்துள்ளது. இங்கிலாந்து நாட்டில் கொரோனாவால் நேற்று ஒரே நாளில் மட்டும் 638 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் அங்கு கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 18,738 ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.