ஜெனீவா: கொரோனா பாதிப்புகள் பல தசாப்தங்களுக்கு நீடிக்கும் என உலக சுகாதார அமைப்பு கவலை தெரிவித்துள்ளது.

உலகளவில் 210 நாடுகளில் பரவியுள்ள கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1 கோடியே 84 லட்சத்தை கடந்துள்ளது. இந்த பாதிப்பால் 6 லட்சத்து 96 ஆயிரம் பேர் பலியாகி உள்ளனர்.

உலகம் முழுவதும் 1 கோடியே 16 லட்சம் பேர் கொரோனாவில் இருந்து மீண்டு இருக்கின்றனர். அமெரிக்காவில் புதியதாக பாதிக்கப்பட்ட 48,600 பேர் உட்பட 48,62,000 ஆயிரம் பேருக்கு பாதிப்பு உள்ளது. இதுவரை 1,58,900 பேர் உயிரிழந்துள்ளனர்.

பிரேசில், ரஷ்யா, இந்தியா, தென்னாப்பிரிக்கா என பல நாடுகளில் லட்சக்கணக்கான மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந் நிலையில், உலக சுகாதார அமைப்பின் தலைமையகத்தில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டம் அதன் தலைவர் டெட்ரோஸ் அதனோம் தலைமையில் நடந்தது. பின்னர் கூட்டத்தில் அதனோம் கூறியதாவது: கொரோனா பற்றிய அறிவியல் பூர்வமான கேள்விகளுக்கு இன்னமும் விடை தெரியவில்லை. தடுப்பு மருந்தை கண்டுபிடித்தாலும், அந்த மருந்து அனைவருக்கும் சென்றடைய வெகு காலம் பிடிக்கும்.

நூற்றாண்டில் ஒரு முறை வரும் சுகாதார நெருக்கடி தான் கொரோனா தொற்று. அதன் விளைவுகள் பல தசாப்தங்களுக்கு நீடிக்கும். அதுவரை கொரோனாவோடு வாழ்ந்து கொண்டே போராட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.