உ.பி.யில் சைக்கிள் சின்னம் யாருக்கு?: பலத்தை நிரூபிக்க தேர்தல் கமிஷன் உத்தரவு

டெல்லி:

சமாஜ்வாடி கட்சியின் சைக்கிள் சின்னம் யாருக்கு சொந்தம் என்பதை உறுதி செய்ய தனித்தனியாக பலத்தை நிரூபிக்குமாறு முலாயம் சிங் யாதவுக்கும், அகிலேஷ் யாதவுக்கும் தேர்தல் கமிஷன் கடிதம் எழுதியுள்ளது.

சமாஜ்வாடி கட்சியின் முலாயம் சிங் யாதவுக்கும், அவரது மகனும், முதல்வருமான அகிலேஷ் யாதவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் கட்சி தற்போது பிளவுப்பட்டு இருக்கிறது. கட்சியின் சின்னமான சைக்கிள் சின்னம் யாருக்கு சொந்தம் என்பதில் இழுபறி நீடிக்கிறது.

இந்த பிரச்னை தற்போது தேர்தல் கமிஷனுக்கு சென்றுள்ளது. இதனால் இருவரும் தங்களது பலத்தை நிரூபிக்க வேண்டும் என்று தேர்தல் கமிஷன் தனித்தனியே கடிதம் எழுதியுள்ளது. எம்எல்ஏ. எம்பி, எம்ல்சி ஆகியோர் தனித்தனியை கையெழுத்திட்ட உறுதிமொழி பத்திரத்தை சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

ஜனவரி 9ம் தேதிக்குள் இதை சமர்ப்பிக்க வேண்டும். தேர்தல் கமிஷனின் வழக்கமான நடவடிக்கை தான் இது. முதல் முறையாக 1969ம் ஆண்டு இந்த நடைமுறையை தேர்தல் கமிஷன் காங்கிரஸ் கட்சியிடம் செயல்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக கடந்த 2ம் தேதி ராம்கோபால் யாதவ் அகிலேஷ் தலைமையிலான கட்சி தான் உண்மையானது என்று தேர்தல் கமிஷனிடம் நூறு பக்கங்கள் கொண்ட மனுவை அளித்தார். இதில் 5 ஆயிரம் கட்சி நிர்வாகிகள், 90 சதவீத எம்எல்சி, எம்எல்ஏ. எம்பி.க்கள் கையெழுத்து போட்டிருந்தனர். இதேபோல் முலாயம்சிங் தரப்பும் தங்களது மனுவை அளித்திருந்தது.
எனினும் ஆதரவாளர்களின் கையெழுத்திட்ட உறுதிமொழி பத்திரத்தை தான் தேர்தல் கமிஷன் ஏற்றுக் கொண்டு சைக்கிள் சின்னம் யாருக்கு என்பதை முடிவு செய்து அறிவிக்கும்.

நேற்று தான் உபி உள்ளிட்ட 5 மாநில தேர்தல் தேதிகளை தேர்தல் கமிஷன் அறிவித்தது. முலாயம்சிங் & அகிலேஷ் இடையே சமரசம் ஏற்படுத்த எடுக்கப்பட்ட கடைசி கட்ட முயற்சியும் பலனளிக்கவில்லை. இதனால் சமாஜ்வாடி கட்சி யாருக்கு சொந்தம்? சைக்கிள் சின்னம் யாருக்கு சொந்தம்? என்பதே அங்கு முதல் போட்டியாக அமைந்துள்ளது

கார்ட்டூன் கேலரி