சென்னை:

புதுச்சேரியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசின் அன்றாட பணிகளில் ஆளுநர் தலையிட அதிகார மில்லை என்று தீர்ப்பளித்த  தனி நீதிபதியின் உத்தரவை  சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. மேலும், புதுச்சேரியில் ஆளுநர், முதல்வர் இணைந்து செயல்படுங்கள் என்று அறிவுறுத்தி உள்ளது.

புதுச்சேரியில் துணை நிலை ஆளுநர் கிரண் பேடிக்கும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் முதல்வர் நாராயணசாமிக்கும் இடையில் கடந்த 4 வருடங்களாக மோதல் இருந்து வருகிறது. மாநில அரசின் நிர்வாகத்தில் ஆளுநர் தலையிடுவதால் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.   இருவரும் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டி வருகின்றனர்.

அரசு நிர்வாகத்தில், ஆளுநர் தலையிட தடை விதிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.  இதை வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றத்தின் தனி நீதிபதி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசு நிர்வாகத்தில் ஆளுநர் தலையிட அதிகாரமில்லை என்று தீர்ப்பு கூறினார்.

ஆனால், இதை எதிர்த்து ஆளுநர்  மற்றும் மத்திய உள்துறை அமைச்சகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கில் விசாரணை முடிவடைந்த நிலையில், இன்று தீர்ப்பு கூறப்பட்டது.

அதில், புதுச்சேரி யூனியன் பிரதேச அரசின் அன்றாட பணிகளில் துணை நிலை ஆளுநர் தலையிட அதிகாரம் இல்லை என்ற தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்வதாக அறிவித்து உள்ளது.

மேலும், புதுச்சேரியில் மாநில அரசும், ஆளுநரும் இணைந்து செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்தியதுடன், தொடர்ந்த  ஆளுநர் – அரசு இடையே அதிகார பிரச்சனை ஏற்பட்டால் மத்திய அரசு தலையிட்டு சமரசம் செய்ய வேண்டும் என்றும்தெரிவித்துள்ளது.