சென்னை:

துக்ளக் 50ஆண்டு நிறைவு விழாவில் கலந்துகொண்டு பேசிய ஆன்மிக அரசியல் செய்யப்போவதாககூறி வரும், நடிகர் ரஜினி காந்த், ‘துக்ளக்’ பத்திரிகை கையில் வைத்திருப்பவனே அறிவாளி,  சோ போன்ற பத்திரிகையாளர் தேவை என்று பேசினார். இது பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது.

துக்ளக் பத்திரிகையின் 50-ஆவது ஆண்டு விழா சென்னை கலைவாணர்அரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் துணை ஜனாதிபதி  வெங்கையா நாயுடு கலந்து கொண்டு துக்ளக் இதழின் 50ஆம் ஆண்டு சிறப்பு மலரை வெளியிட  நடிகர் ரஜினிகாந்த் பெற்றுக்கொண்டார்.

இதையடுத்து  பேசிய ரஜினி,  துணை ஜனாதிபதி, வெங்கையா நாயுடு இன்னும் சில ஆண்டுகள் மக்கள் சேவையில் இருந்திருக்கலாம் என்று கூறியவர்,  தற்போது அவர் வகிப்பதும்,  ஒரு தந்தைக்குரிய பதவிதான். பல ஆண்டுகளாக மக்களுக்காக உழைத்து குடியரசு துணைத் தலைவராகியுள்ளார் வெங்கையா.

தொடர்ந்து பேசியவர்,  “துக்ளக்கை சோ எப்படி எடுத்து சென்றாரோ அதேபோல தான் இன்றும் குருமூர்த்தி துக்ளக்கை எடுத்துச் செல்கிறார். மறைந்த சோ குருமூர்த்தியை முழுமையாக நம்பினார். அவராமல்  மட்டும் தான் துக்ளக்கை எடுத்து செல்ல முடியும் என்பது தெரியும் என்று குருமூர்த்தியை புகழ்ந்தார்.

சோ ஒரு ஜீனியஸ். குருமூர்த்தி  ஜீனியஸ் என்பதை அடையாளப்படுத்த சில ஆண்டுகளாகும். தான் ஜீனியஸ் என்பதை நிரூபிக்க சோ எடுத்துக்கொண்ட துறை பத்திரிக்கை துறை. அவரது ஆயுதம் துக்ளக். சோ ராமசாமியையும், துக்ளக் பத்திரிகையையும் பெரிய அளவில் பிரபலப்படுத்தியவர்கள் இருவர்; ஒருவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி, மற்றொருவர் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி

தற்போதைய சூழலில் சமுதாயம் மிகவும் கெட்டுப்போயுள்ளது; இந்தநிலையில் சோ போன்ற பத்திரிகையாளர் ஒருவர் அவசியம் தேவை,  பொதுவாக முரசொலி கையில் வைத்திருந்தால் திமுக என்பார்கள்; அதேபோல துக்ளக் வைத்திருந்தால் அவர் அறிவாளி என்பார்கள் என்று பேசி பரபரப்பை ஏற்படுத்தினார்.

கவலைகளை நிரந்தரமாக்கிக்கொள்வதும், தற்காலிகமாக்கிக்கொள்வதும் நம் கையில் தான் உள்ளது. கவலையை நிரந்தரமாக்கிக் கொண்டால் நோயாளி. தற்காலிகமாக்கிக்கொண்டால் அறிவாளி. பால் போன்று இருக்கும் உண்மையான செய்தியில் தண்ணீர் என்ற பொய்யை கலந்துவிடக்கூடாது. ஊடகங்கள் எப்போதும் பாலையும், நீரையும் பிரிப்பது போன்று உண்மையையும், பொய்யையும் பிரிக்க வேண்டும். பால் போன்று இருக்கும் உண்மையான செய்தியில் பொய் என்னும் தண்ணீரை கலந்துவிடக் கூடாது

இவ்வாறு அவர் பேசினார்.

ரஜினியின் பேச்சு விழாவில் கலந்துகொண்டவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.