ர்.கே.நகர் இடைத்தேர்தல் முடிந்து நாளை வாக்குப்பதிவு நடக்க இருக்கிறது. அ.தி.மு.க. வேட்பாளர் மதுசூதனன், தி.மு.க. வேட்பாளர் மருது. கணேஷ், சுயேட்சை வேட்பாளர் டி.டி.வி. தினகரன் ஆகியோரில் யார் வெற்றி பெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்த நிலையில், சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி இது குறித்து தனது கணிப்பைத் தெரிவித்துள்ளார்.

இன்று சேலம் வந்த அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர்,  “ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் நேரமையான முறையில் நடைபெறவில்லை.  தேர்தல் ஆணையமும், தேர்தலை எப்படியாவது நடத்தி முடிக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் நடத்தி முடித்திருக்கிறது.

ஆனாலும் மக்கள் நியாயமான முறையில் வாக்களித்திருப்பார்கள் என நம்புகிறேன். அத் தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் மருது.கணேஷ் அல்லது சுயேட்சை வேட்பாளர் தினகரன்.. ஆகியோரில் ஒருவர் வெற்றி பெறக்கூடும்” என்றார்.

மேலும் அவர், “ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை தற்போது நடந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் அவர் சிகிச்சை பெற்ற  வீடியோ வெளியிடப்பட்டதை தவறு என்று சொல்லமுடியாது. அவரது சிகிச்சை குறித்து மக்கள் பார்வைக்கு வந்தது நல்ல வி‌ஷயம் தான். மேலும் அனைத்து வீடியோக்களையும் வெளியிட வேண்டும்” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “தமிழகத்தில் இன்னும் மூன்று மாதங்கலில்  பொதுத்தேர்தல் வரும். எவருக்கும் நிரந்தர சின்னம் என்பது இருக்க கூடாது. அதற்கு எதிராக போராடுவேன்” என்று தெரிவித்தார்.