மும்பை உயர்நீதிமன்ற அடுத்த தலைமை நீதிபதி யார்? – ஏனிந்த எதிர்பார்ப்பு?

மும்பை: நாட்டின் இரண்டாவது பெரிய உயர்நீதிமன்றமான மும்பை உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதி யார்? என்ற கேள்வியும் எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

நாட்டின் முதலாவது பெரிய நீதிமன்றம் அலகாபாத் உயர்நீதிமன்றம் என்பது குறிப்பிடத்தக்கது.

தலைமை நீதிபதி, 71 நிரந்தர நீதிபதிகள் மற்றும் 23 கூடுதல் நீதிபதிகள் என்று மும்பை உயர்நீதிமன்றத்தில் மட்டும் மொத்தமாக 95 நீதிபதிகள் உள்ளனர். தற்போதைய தலைமை நீதிபதி பிரதீப் நந்த்ராஜாக் இவ்வாரத்தில் ஓய்வுபெற உள்ளார்.

இதுதவிர வேறுசில நீதிபதிகளும் ஓய்வு பெறுகின்றனர்.
உச்சநீதிமன்றத்தின் கொலிஜியம் அமைப்பு, மாநில உயர்நீதிமன்றங்களுக்கான தலைமை நீதிபதிகளை நியமனம் செய்து வருகிறது. தற்போதைய சூழ்நிலையில் கொலிஜியத்தின் உத்தரவை பெரும்பாலான நீதிபதிகள் ஏற்க மறுத்து வருகின்றனர்.

மும்பை ஐகோர்ட்டின் இரண்டாவது நிலையில் உள்ள சத்யரஞ்சன் சி தர்மதிகாரி தனிப்பட்ட காரணங்களுக்காக ராஜினாமா செய்துள்ளார். ஒடிசா மாநிலத்திற்கு அவர் மாற்றப்பட பரிசீலிக்கப்பட்டு வரும் நிலையில் அவர் ராஜினாமா செய்துள்ளதாக கூறப்படுகிறது. சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி தஹில் ரமானி இடமாற்றத்தை எதிர்த்து ராஜினாமா செய்ததும் நினைவில் கொள்ளத்தக்கது.

தற்போதைய நீதிபதிகளே பதவி உயர்வு பெற்று மும்பை ஐகோர்ட் தலைமை நீதிபதியாக பதவியேற்க உள்ளனரா? அல்லது வெளிமாநில ஐகோர்ட்டில் இருந்து வேறு ஒருவரை நீதிபதியாக நியமிக்க கொலிஜியம் உத்தரவிட உள்ளதா? என ஐகோர்ட் வட்டாரத்தில் விவாதிக்கப்பட்டு வருகிறது.