யார் தமிழர்? & ‘ரஜினி அரசியல்’ எப்படிப்பட்டது?

ரவுண்டஸ்பாய் கேள்வி:  ராமண்ணா பதில்:

கேள்வி: ‘ரஜினி அரசியல்’ எப்படிப்பட்டது?

பதில்: ‘இறைச்சிக்காக மாடு விற்க தடை’ என்ற மோடியின் நடவடிக்கை பற்றி ‘நோ கமெண்ட்ஸ்’ என்கிறார் ரஜினி.

மே 18 முள்ளிவாய்க்கால் நினைவு பற்றி கேட்டபோதும் பதில் சொல்ல மறுத்தார்.

இதே ரஜினிதான் யாரும் கேட்காமலேயே , ‘மோடி அறிவித்த ரூபாய்.நோட்டு தடை மிகச்சிறந்த நடவடிக்கை. புதிய பாரதம் பிறந்தது’ என்றார்.

ரஜினி அரசியலை புரிந்துகொள்ள இது போதும்.

கேள்வி: தமிழக அரசை மத்திய பாஜக அரசு ஆட்டிப்படைக்கிறது என்பது உண்மைதானா?

பதில்: இது உண்மைதான் என்பதை உறுதிப்படுத்தும் விதமாக எத்தனையோ சம்பவங்கள் நடந்துவிட்டன. சமீபத்திய உதாரணம், துணைவேந்தர் பதவிக்கு, ஆளுநர் தேர்வு நடத்தியது.

தமிழக அரசு சார்பில் துணைவேந்தர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, ஆளுநர் பதவிப்பிரமாணம் செய்துவைப்பதுதான் முறை.

ஆனால் இப்போது, மத்திய அரசின் பிரதிநிதியான நேரடியாக ஆளுநரே களத்தில் இறங்கியிருக்கிறார். மாநில அரசு வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறுது.

அதே போல இன்னொரு சமீபத்திய உதராணம்…  இறைச்சிக்காக மாடு விற்க தடை என்றது மத்திய அரசு. இதற்கு அகில் இந்தியா முழுவதும் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. தமிழகத்திலும் கடும் எதிர்ப்பு. ஆனால் மாநில அரசோ வாய்மூடி மவுனம் காக்கிறது.

முதல்வர் எடப்பாடியிலிருந்து அமைச்சர்கள், ஆளும்கட்சி எம்.எல்.ஏக்கள் வரை.. மீதமுள்ள ஆட்சி காலத்தில் பாஜக காலில் சமர்பபித்துவிட்டு தாங்கள் “வாழ” வேண்டும் என செயல்படுகிறார்கள். அவ்வளவே.

கேள்வி: இந்திய அரசியலில் தற்போது அதீத பதவி வெறி பிடித்தவர் என்று எந்த அரசியல்வாதியைச் சொல்வீர்கள்.

பதில்: எல்லா அரசியல்வாதிகளுக்குமே இந்த வியாதி உண்டு. ஆனால் “தற்போது –  அதீத” என்று கேட்டுவிட்டீர்கள்.

யோசிக்காமல் சொல்லலாம்.. ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ். இருவரும்தான்.

மத்திய பாஜக அரசு, மாநில மந்திரிகளின் வீட்டில் ரெய்டு நடத்துகிறது. தலைமைச் செயலகம் புகுந்து செயலாளரை சோதிக்கிறது, “இந்த ஆட்சி மிக மோசம்” என்று தினமும் மனப்பாடம் போல் ஒப்பிக்கிறார்கள் தமிழக பாஜக தலைவர்கள். அது மட்டுமல்ல.. “கழகங்கள் இல்லா தமிழகம்.. கவலை இல்லா தமிழகம்” என்று மாநிலம் முழுதும் சுவர் கிடைத்த இடங்களில் எல்லாம் எழுதி வைத்திருக்கிறார்கள்.

பதிலுக்கு ஓ.பி.எஸ்ஸோ ஈ.பி.எஸ்ஸோ.. எந்தவித ரீயாக்ஷனும் காட்டவில்லையே.   மத்திய பாஜக அரசின் செயல்பாடுகள் எதையும் விமர்சிக்காமல் இருக்கிறார்களே.

முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ்., “மூன்றாண்டு மோடி ஆட்சியின் சாதனைகளுக்கு வாழ்த்துகள்” என்கிறார்.

இந்நாள் முதல்வர், “மத்திய அரசின் மூன்றாண்டு சாதனைகளை விளக்கி மாநில அரசு புத்தகம் வெளியிடும்” என்கிறார்.

பதவி என்ன பாடுபடுத்துகிறது இவர்களை!

ஆகவேதான் உட்சபட்ச பதவி வெறியின் உதாரணமாக இந்த இருவரையும் சொல்கிறேன்.

( இவர்கள் ஜெயலலிதாவின் பிறகு சசிகலாவின் காலில் விழுந்துகிடந்தபோதே “சிறந்த அடிமைகள்” என்பதோடு, “சிறந்த(!) பதவி வெறி பிடித்தவர்கள்” என்ற பட்டத்தை வென்றுவிட்டார்கள் என்பது  உம்மை.

கேள்வி: : யார் தமிழர்?

பதில்:  சீனா பொதுவுடமை தேசமாக மலர்ந்தவுடன், மாசேதுங் ஒரு அறிவிப்பை வெளியிட்டார்.

குறிப்பிட்ட காலக்கெடு நிர்ணயித்து, “உலகெங்கிலும் இருக்கும் சீன மக்கள், இங்கு வரலாம். காலக்கெடுவுக்குள் வராதவர்கள் அந்தந்த நாட்டு மக்களாகவே கருதப்படுவர்” என்றார்.

அதன்படி, குறிப்பிட்ட கெடுவுக்கள் வராதவர்களை அந்தந்த நாட்டு மக்களாகவே சீனா கருதியது.

அது போல, இங்கும் ஒரு தெளிவான வரையரை வேண்டும்.  தமிழ்த் தேசிய பொதுவுடமை கட்சியின் பெ.மணியரசன், “இந்தியா மொழி வாரி மாநிலங்களாக பிரிக்கப்பட்ட  1956ம் ஆண்டுக்கு முன் தமிழகத்து வந்து குடியேறிய பிற மொழியினரும் தமிழர்களே என்று வரையரை வைத்துக்கொள்ளலாம்” என்று குறிப்பிட்டது நினைவுக்கு வருகிறது. இது சரியெனவே தோன்றுகிறது.

அப்படி இன்றி ஆயிரம் வருடத்துக்கு முன்பு இங்கே வந்து குடியேறி, தங்கள் பூர்வீக மண்ணுடன் – இனத்தாருடன் தொடர்பின்றி, தமிழராகவே வாழ்ந்து, தமிழுக்கும், தமிழர்க்கும் தங்கள் பங்குபணியை ஆற்றியவர்களையும் “வந்தேறி”என்பது சரியில்லை.

இது, தமிழுக்கும், தமிர்க்கும் செய்யும் கேடுதான்.

இன்னொரு வகையில், இப்படி தமிழரை பிரிக்கும் நபர்களின் பின்னணியில் தமிழர்க்கு எதிரான சக்திகள் இருக்கும் என்றே தோன்றுகிறது.  (

இன்னொரு விசயம்.. என்னதான், நாம் “தமிழர், தமிழர் அல்லாதவர்” என்று பேசினாலும்  அனைவரும் இந்தியர்தான். (இங்கே ஒரு ஸ்மைல் போட்டுக்கொள்ளுங்கள்!)

கேள்வி: தனிப்பட்ட முறையில் செய்தியாளர்கள் சிலரை ரஜினி சந்தித்துவருகிறாராமே..

ஆமாம். “நக்கீரன்” ஆசிரியர் கோபால், புதிய தலைமுறையின் கார்த்திகை செல்வன், தினமணி ஆசிரியர் வைத்தியநாதன், நியுஸ் 18 குணசேகரன், ஸக்கா ஜேக்கப் ஆகியோரை இது வரை சந்தித்துள்ளார்.   நடப்பு அரசியல் நிலைமைகள் குறித்து அவர்களுடன் விவாதித்தாராம்.

இது குறித்து மூத்த ஊடகவியாளர் ஒருவர் என்னிடம் தெரிவித்ததை இங்கே சொல்வது பொறுத்தமாக இருக்கும்:

“ஊடகங்களால் ஊதிப் பெருக்கவைக்கப்பட்டதே ரஜினி என்கிற பிம்பம். ஆனால் ரஜினியோ ஊடகங்களை மதித்தே கிடையாது. பத்திரிகைகளுக்கு அவர் பேட்டி கொடுத்து இரண்டு மாமாங்கத்துக்கு மேல் ஆகிவிட்டன. பேட்டிக்காக அணுகினாலும் பதில் வராது.

சில வருடங்களுக்கு முன் திரைப்பட தொழிலாளர் நிகழ்ச்சி ஒன்றில் மேடையில் ரஜினியிடம் இயக்குநர் கே. பாலச்சந்தர் சில கேள்விகளைக் கேட்க, அதற்கு ரஜினி பதில் அளித்தார். அது சன் டிவியில் ஒளிபரப்பானது. இதுதான் ரஜினி அளித்த பேட்டி.

தேர்தல் நேரத்தில் தனது ஆதரவு யாருக்காக என்பதை வெளியிடும்போது கூட செய்தியாளர்களை அவமதித்தார் ரஜினி.

2004ம் ஆண்டு. ராகவேந்திரா கல்யாண மண்டபத்தில் செய்தியாளர்களை சந்திக்கிறார் ரஜினி என்று செய்தி வந்தது.  தமிழக பத்திரிகை, தொ.கா. மட்டுமின்றி, அகில இந்திய அளவில் ஊடகவியலாளர்கள் ஓடி வந்தார்கள்.

மண்டபத்தின் உள்ளே இந்தியாவின் முன்னணி செய்தி நிறுவனங்கள், தொலைக்காட்சி, பத்திரிகை செய்தியாளர்கள். பிரபல தொலைக்காட்சி நிறுவனங்கள் நேரலையாக ரஜினி பேட்டியை ஒளிபரப்ப தயாராக வந்திருந்தன.

ரஜினி வந்தார்… அறிக்கையை வாசித்தார்.. கிளம்பிச் சென்றுவிட்டார்.

செய்தியாள்ரகள்.. “ஒன் கொஸ்டின்.. ஒன் கொஸ்டின்” என்று கதறினார்கள். மறுப்பாக கையைக் காட்டிவிட்டு கிளம்பிவிட்டார் ரஜின. செய்தியாளர்களின் குரல் அவரது பிட்டத்தில் மோதி எதிரொலித்தன.

“இப்படி ஏற்கெனவே தயார் செய்த அறிக்கையை படித்துக்காட்டவா நம்மை வரச் செய்தார்.. இதற்கு நமது அலுவலகத்துக்கு பேக்ஸ் அனுப்பியிருக்கலாமே.. அல்லது தகவல் சொன்னால் நமது அலுவலக உதவியாளரகள் (பியூன்) வந்து அறிக்கை நகலை வாங்கியிருப்பார்களே” என்று புலம்பியபடியே கிளம்பினர் செய்தியாளர்கள்.

அதுமட்டுமா.. தனது படத்தின் செய்தியாளர் சந்திப்புக்குக்கூட இவர் வரமாட்டார்.

ரசிகர்கள் சந்திப்பின்போதுகூட, “அரசியலுக்கு வர்றதா சொல்லி மாத்தி மாத்தி பேசறார் ரஜினி என்றும் சிலர் விமர்சிக்கிறார்கள். சொல்றவன் சொல்லிக்கிட்டுத்தான் இருப்பான்” என்று தன்னை விமர்சிக்கும் ஊடகங்களையும் சேர்த்து “மரியாதையுடன்” விமர்சித்தார் ரஜினி.

இப்படி செய்தியாளர்களை தன் கால் தூசு அளவுக்குக் கூட மதிக்காத ரஜினி, இன்று சில செய்தியாளர்கை சந்தித்து ஆலோசனை நடத்துவது வரவேற்கத்தக்கதே.

இது தொடர வேண்டும். செய்தியாளர் சந்திப்புகளும் நடத்தவேண்டும்” என்றார் அந்த மூத்த பத்திரிகையாளர்.

 கேள்வி: ரஜினி தமிழர் அல்லர் ஆகவே அவர் அரசியலுக்கு வரக்கூடாது.. முதல்வராக நினைக்கக் கூடாது என்கிறாரே சீமான்!

பதில்: ரஜினி,  கட்சி தலைவராக இருந்துகொண்டு, லதா ரஜினியை முதல்வராக்கிவிடலாம்.  தமிழ், தமிழர் என்கிற பிரச்சினையில் இருந்து ரஜினி ஈஸியாக எஸ்கேப் ஆகிவிடலாம்.  (ஏதோ ரஜினிக்கு, நம்மால் ஆன ஐடியா!)