அரசியல் என்பது ஒரு மாயக்கலை மற்றும் மாயவலை! முதலாளித்துவ ஜனநாயக அரசியலில் (இந்தியாவில் அது நிலமானிய காலனிய ஜனநாயகம் என்று வரையறை செய்யப்படுகிறது), ஒரு அரசியல்வாதி என்னதான் திறமையானவராக இருந்தாலும், அவரின் எதிரிகள் வலுவானவர்களாய் இருக்கும்போது, அவரைப் பற்றிய பிம்பங்கள் வேறுமாதிரி எதிர்மறையாக கட்டமைக்கப்பட்டு விடும் அல்லது அவருக்கான நியாயமான பாராட்டுகளும் புகழ்மொழிகளும் கிடைக்காமல் செய்யப்பட்டுவிடும்.

கலைஞர் மு.கருணாநிதி இத்தகைய ஒரு அநீதிக்கு ஆளாக்கப்பட்டவர்தான்!

தமிழக அரசியலின் இரும்பு மனிதர் & மிகவும் தைரியமானவர் என்ற பட்டங்கள் நியாயமாக இவருக்குக் கிடைத்திருக்க வேண்டும்! ஆனால், அந்தப் பட்டம் சம்பந்தமில்லாமல் சென்றதோ இன்னொருவருக்கு..!

கடந்த 1969ம் ஆண்டில் அறிஞர் அண்ணா இறந்தவுடன், திமுகவின் முன்னணி தலைவராகவும், அமைச்சரவையில் மூன்றாம் இடத்தில் இருந்தவருமான கருணாநிதிக்கே, அதிக சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இருந்தது. இதை உணர்ந்து கொண்ட எம்.ஜி.ராமச்சந்திரன், தனது ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்களையும் கலைஞர் கருணாநிதிக்கே ஆதரவளிக்கச் செய்தார்.

கலைஞர் கருணாநிதி தமிழக முதல்வராகவும், திமுகவின் தலைவராகவும் பதவியேற்றது, சொந்தக் கட்சியிலேயே பலரை நிம்மதியிழக்கச் செய்ததோடு மட்டுமல்லாமல், டெல்லி அதிகார மையங்களின் கண்களையும் உறுத்தியது என்றே சொல்லலாம்!

டெல்லியின் உறுத்தல்களுக்கு நியாயம் இருக்கவே செய்தது. தான் முதல்வராக பதவியேற்ற ஆண்டிலேயே (1969), ஓய்வுபெற்ற நீதிபதி பி.வி.ராஜமன்னார் தலைமையில் மத்திய – மாநில அரசுகளின் அதிகாரங்களை ஆய்வுசெய்ய 3 நபர் கமிஷனை அமைத்து, டெல்லியை அதிர்ச்சிக்குள்ளாக்கியதோடு, அகில இந்தியாவையும் ஆச்சர்யத்துடன் திரும்பிப் பார்க்க வைத்தார்.

இதுபோன்ற ஒரு கமிஷனை அமைப்பது, அன்றைய ஆண்டுகளில் மட்டுமல்ல, இன்றைய ஆண்டுகளிலும் சாதாரண விஷயமல்ல! ஏனெனில், டெல்லியில் தனிப்பெரும்பான்மை அரசுகள் கோலோச்சும்போது அவைகளின் அதிகாரம் வேறுமாதிரியானது! அதையெல்லாம் எதிர்த்து கேள்வி கேட்பதற்கு ஒரு தனி தைரியம் வேண்டும்!

அன்றைய மத்திய அரசிடம் போராடி, சுதந்திர தினத்தில், மாநில முதல்வர்கள், அவரவர் மாநிலங்களில் தேசியக் கொடியை ஏற்றலாம் என்று இவர் உரிமைப் பெற்று தந்த நிகழ்வு அடிக்கடி நினைவுகூறப்பட்டு வருகிறது.

தொடர்ந்து, மாநில சுயாட்சியை வலியுறுத்தும் வகையிலும், பல முற்போக்கான திட்டங்களையும் முன்னெடுத்துச் செல்ல, 1971ம் ஆண்டு தேர்தலிலும் திமுக மிகப்பெரிய வெற்றியைப் பெற, கருணாநிதியை கட்டுப்படுத்த, 1972ம் ஆண்டு திமுக உடைக்கப்பட்டது. பிரச்சினையை ஆறப்போடலாம், தானாக சரியாகிவிடும் என்றிருந்த கருணாநிதியின் எண்ணத்திற்கு மாறாக, அவர்மீது பொறாமை கொண்டிருந்த திமுகவின் முன்னணி தலைவர்கள் சிலரே, எம்.ஜி.ராமச்சந்திரன் கட்சியிலிருந்து நீக்கம் என்ற செய்தியை பத்திரிகைகளுக்கு கொடுத்துவிட்டனர்.

இதற்கடுத்து வருவதுதான் நெருக்கடி நிலை என்ற ஒரு மாபெரும் அடக்குமுறை! இந்தியாவே அஞ்சி நடுங்கிக் கொண்டிருந்த காலகட்டத்தில், தமிழகத்தின் கருணாநிதி அரசு, மிக தைரியமாக நெருக்கடி நிலையை எதிர்த்தது. இந்திரா காந்தியின் கைது நடவடிக்கையிலிருந்து தப்பிக்க நினைத்த தலைவர்கள் பலரும் தமிழ்நாட்டில் தஞ்சம் புகுந்தனர்! ‘இந்தியாவில் ஜனநாயகம் உயிர்வாழும் ஒரே இடம் தமிழ்நாடுதான்’ என்று காமராஜர், கருணாநிதியின் அரசைப் புகழ்ந்தார்.

நெருக்கடி நிலையை ஆதரித்தால், தமிழக அரசின் ஆயுட்காலம் மேலும் ஓராண்டு நீட்டிக்கப்படும் என்ற வாக்குறுதி டெல்லியிலிருந்து கொடுக்கப்பட்டதாகவும், அதற்கு கலைஞரின் திமுக அரசு மசியவில்லை என்பதும் மற்றொரு அரசியல் தகவல்!

அதன்பிறகு, ஆட்சி கலைக்கப்பட்டு, கலைஞர் கருணாநிதி, நெடுஞ்செழியன் மற்றும் அன்பழகன் உள்ளிட்ட சிலரைத் தவிர, திமுகவின் முன்னணித் தலைவர்கள் மற்றும் கட்சிக்காரர்கள் கைதுசெய்யப்பட்டு, சிலர் சிறைக் கொட்டடி சித்திரவதைகளால் இறந்தாலும், நெருக்கடி நிலையை தளராமல் எதிர்த்தது கருணாநிதியின் திமுக. அப்போதிருந்த பத்திரிகை தணிக்கையையும் மீறி, மிக சாதுர்யமாக செயல்பட்டு அரசியல் பார்வையாளர்களின் ஆச்சர்யங்களை அள்ளிச் சென்றார் கருணாநிதி!

ஆனால், மாநில அரசை மதிக்காமலும் கலந்து பேசாமலும், மத்திய அரசிற்கே உள்ள எதேச்சதிகாரத்தின் மூலம் கச்சத்தீவு, இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டபோதும் சரி, நெருக்கடி நிலை அமல்செய்யப்பட்டபோதும் சரி, அந்த நடவடிக்கைகளை எல்லாம் ஆதரித்தது எம்.ஜி.ராமச்சந்திரனின் அன்றைய அதிமுக.

அதன்பிறகான காலக்கட்டத்தில், 1980ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில், திமுக – காங்கிரஸ் கூட்டணி அமைந்தபோது, இந்தியாவில் வேறு எங்குமே நெருக்கடி நிலை கொடுமைகளுக்காக மன்னிப்புக் கேட்காத இந்திரா காந்தி, தமிழகத்தில்தான் மன்னிப்புக் கேட்டார் என்பது ஒரு தனி சுவாரஸ்யம்! அதற்கு காரணம் யாரென்பதை இங்கே தனியாக சொல்ல வேண்டியதில்லை.

தொடர்ந்த காலஓட்டத்தில், இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்ட இந்திய அமைதிப்படை, அங்கு அப்பாவி தமிழர்களின் மீது நிகழ்த்திய வன்முறை மற்றும் தமிழ் பெண்களின் மீது கையாண்ட பாலியல் வன்கொடுமைகளை கருணாநிதியின் திமுக கடுமையாக எதிர்த்தது. அதன் தொடர்ச்சியாக, விபிசிங் பிரதமராக இருந்தபோது, இந்திய அமைதிப்படை இலங்கையிலிருந்து திரும்பப் பெறப்பட்டபோது, அந்தப் படை சென்னை விமான நிலையத்தில் வந்திறங்கியபோது, மாநில முதல்வர் என்ற வகையில், வரவேற்கச் செல்லாமல் புறக்கணித்தார் கலைஞர் கருணாநிதி! இது ஒரு பெரிய அதிர்வலையை இந்திய அளவில் ஏற்படுத்தியது.

இப்படி எத்தனையோ விஷயங்களில், மாநில உரிமைகள், மாநில சுயாட்சி என்று அதிகாரமிக்க டெல்லியோடு, தொடர்ந்து மோதி வந்த வரலாற்றைக் கொண்டவர் கலைஞர் கருணாநிதி.

மேலும், இந்தியாவின் பழமைவாத மற்றும் ஆதிக்க சக்திகளையும் தொடர்ந்து எதிர்த்து, பல சமூகநீதி திட்டங்களை செயல்படுத்தியதோடு மட்டுமின்றி, அவைகளுக்கு எதிரான கருத்தியல் போர்களையும் கைவிடாதவர்!

ஆனால், இவருக்கு தமிழக அரசியலின் இரும்பு மனிதர் அல்லது தைரிய மனிதர் என்ற அடைமொழிகளெல்லாம் கிடைக்கவேயில்லை!

மாறாக, தன்னை சந்திக்க வரும் நபர்களை, மணிக்கணக்கில் வேண்டுமென்றே காக்க வைப்பது, வலிமையுள்ளவர்களிடம் ஒரு மாதிரியும், சற்று வலிமை குறைந்தவர்களிடம் இன்னொரு மாதிரியும் நடந்துகொள்வது, தன்னை விமர்சனம் செய்யும் பத்திரிகைகள் மற்றும் தனிநபர்களை கைதுசெய்தும், வழக்குகள் போட்டும் பழிவாங்குவது, தன் கட்சிக்காரர்களுக்கே அரிதாக தரிசனம் தருவது, கட்சித் தலைமை அலுவலகத்திற்கு அபூர்வமாக வருகை தருவது, ஆட்சியல் இல்லாத காலங்களில் பெரும்பாலும் ஓய்வெடுத்துவிட்டு, தேர்தல் நேரங்களில் மட்டும் களத்திற்கு வருவது உள்ளிட்ட பல்வேறு அம்சங்களுக்கு புகழ்பெற்ற ஒருவருக்குத்தான் தமிழக அரசியலின் தைரிய மனிதர் என்ற பட்டம் கிடைத்துள்ளது!

அரசியலின் வினோதங்களில் இதுவும் ஒன்றுதான் என்பது மட்டுமல்ல; பொய்ப் பிரச்சாரங்களின் வலிமைக்கு இதுவும் ஒரு சான்று..!

 

– மதுரை மாயாண்டி