“தோழர்” என்கிற வார்த்தையை முதன் முதலில் பயன்படுத்தியவர் யார் தெரியுமா?

ரஞ்சித் ட்விட்

றம்” படத்தக்கு வாழ்த்து தெரிவித்த பா.ரஞ்சித், நயன்தாராவை தோழர் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தட்ட… தடதடத்துப் போயிருக்கின்றன பேஸ்புக் உள்ளிட்ட சமூகவலைதளங்கள்.

“ஆபாசமாக (வும்) நடிக்கும் நடிகையை தோழர் என்று கூறலாமா” என்று சிலர் விளிக்க… “அழைத்தால் என்ன தவறு..” என்று வேறு சிலர் எதிர்க்க..  கால்பந்தாட்ட பந்துபோல இணையங்களில் உதைபட்டுக்கொண்டிருக்கிறது  ‘தோழர்’  என்கிற வார்த்தை.

“’அநீதிக்கு எதிராகக் குரல் கொடுத்தால் நீயும் என் தோழனே!”  என்ற சேகுவாராவின் குரல், ஒலிக்காத செவிகள் உண்டோ?

சரி.. தோழர் என்கிற வார்த்தை எப்போது பயன்பாட்டுக்கு வந்தது?

கபிலர்

பழந்தமிழ் இலக்கியங்களிலேயே “தோழன்” என்ற வார்த்தை உண்டு.

`இவர் யார்?` என்குவை ஆயின்,

இவரே ஊருடன் இரவலர்க்கு

அருளித் தேருடன் முல்லைக்கு

ஈத்த செல்லா நல்லிசை

படுமணி யானைப் பறம்பின்

கோமான் நெடுமாப் பாரி மகளிர்;

யானே தந்தை தோழன்;

இவர்என் மகளிர்’

என்றார் புலவர் கபிலர்.

ரஷ்யப் புரட்சி வீரர்கள் ‘காம்ரேட்’ என்று அழைத்துக்கொண்டனர். இதையே பின்பற்றி  இந்தியாவில் கம்யூனிஸ்ட் இயக்கம் உருக்கொண்டபோது அந்த இயக்கத்தில் இருந்தவர்கள் ‘காம்ரேட்’  தங்களுக்குள் அழைத்தக்கொண்டனர்.

திரு.வி.க.

அதற்கு இணையான தமிழ்ச் சொல்லாக மலர்ந்தது ‘தோழர்’.இந்த வார்த்தையைத் தமிழில் முதன்முதலில் பயன்படுத்தியவர் திரு.வி.கல்யாணசுந்தரனார்.

(பழந்தமிழ் இலக்கியங்களில் தோழன் என்ற வார்த்தை இருந்தாலும், திரு.வி.க. பயன்படுத்திய தோழன் என்கிற வார்த்தை.. அதைப் பயன்படுத்திய சூழல்.. வேறுபட்டது.)

இந்தியாவின் முதல் தொழிற்சங்கத்தை உருவாக்கியவர். எந்தவித உரிமைகளும் இல்லாமல் துயரப்பட்ட தொழிலாளர்கள் இவரது தலைமையில் இணைந்தனர்.

திரு.வி.க.வுக்குப் பிறகு தொழிற்சங்கத் தலைவரானவர் பொம்மன் ஜி வாடியா என்பவர். இவர்,  மான்சென்ஸ்டர் தொழிலாளர்கள் அழைப்பின்பேரில் இங்கிலாந்து சென்று திரும்பினார்.  அவரை வரவேற்று சென்னையில் கூட்டம் ஒன்று நடைபெற்றது. அதில் பேசிய வாடியா, ‘காம்ரேட்ஸ்’  என்று தனது பேச்சை ஆரம்பித்தார். அதை, திரு.வி.க., ‘தோழர்களே’ என்று மொழிபெயர்த்தார்.

இன்னொரு பக்கம் பெரியார்….

சோவியத் யூனியன் செல்வதற்கு முன்பே பொதுவுடைமைக் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டிருந்தார் பெரியார்.

கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையை தமிழில் முதன் முதல் வெளியிட்டார்.

1931ல் அவர் சோவியத் யூனியன்  சென்றுவந்தபிறகு கம்யூனிசத்தைப் பரப்புவதில் தீவிரமானார்.

அந்த காலகட்டத்தில்தான், “இயக்கத் தோழர்களும் இயக்க அபிமான தோழர்களும் இனி ஒருவருக்கொருவர் அழைத்துக் கொள்ளுவதிலும், பெயருக்கு முன்னால் பின்னால் மரியாதை வார்த்தை சேர்ப்பது என்பதிலும் ஒரே மாதிரியாக “தோழர்” என்கின்ற பதத்தையே உபயோகிக்க வேண்டும் என்றும், மகா, ஸ்ரீ, கனம், திருவாளர், திரு, தலைவர், பெரியார், திருமதி, ஸ்ரீஜத் என்பது போன்ற வார்த்தைகள் சேர்த்து பேசவோ எழுதவோ கூடாது என்று வணக்கமாய் வேண்டிக் கொள்ளுகிறேன். குடியரசு இதழிலும்  அடுத்த வாரம் முதல் அந்தப்படியே செய்ய வேண்டுமென்று தெரிவித்துக் கொண்டிருக்கிறேன்” என்று 13.11.1932ல்  குடியரசு இதழில் எழுதினார் பெரியார்.

அவரது தளபதியாக விளங்கிய.. அஞ்சாநெஞ்சன் என்று அழைக்கப்பட்ட பட்டுக்கோட்டை அழகிரிசாமி மேடையில் பேசும்போது ‘தோழர் ராமசாமி’ என்றுதான் பெரியாரை அழைப்பார்.

பெரியாரும் தன் கட்டுரைகளில் மாற்றுக் கருத்துள்ளவர்களைக்கூட  அப்படித்தான் குறிப்பிட்டார். காந்தி, ‘மகாத்மா’ என்றழைக்கப்பட்ட  நிலையில் ‘தோழர் காந்தியார்’ என்றெ எழுதினார் பெரியார்.

பெரியார்

பெரியார் என்று என்னை அழைக்கவேண்டாம்; தோழர் என்றே அழையுங்கள்’ என்றும் அவர் வலியுறுத்தனார்.

அதே போல அண்ணாவும்,  திராவிடர் கழகத்தில் இருந்த காலம் முழுவதும், ‘தோழர்’ என்று தன் மேடைப் பேச்சுக்களில் குறிப்பிடுவார்.  பின்னாளில் இது மாறிவிட்டது.

இன்றளவும் “தோழர்” என்ற வார்த்தையை உணர்வுபூர்வமாக சொல்லாடுபவர்கள் இடதுசாரி சிந்தனையாளர்கள்.

“தோழர்” என்பது வெறும் சொல் அல்ல..   அடக்கு முறைக்கு எதிரான.. மனிதத்தின் அடையாளமாக விளங்குவது என்பது இடதுசாரி சிந்தனையாளர்களின் கருத்து.

சரி.. இப்போது தெரிந்துகொண்டீர்களா.. தோழர் என்ற வார்த்தையை தமிழக மக்களுக்கு அறிமுகப்படுத்தியத திரு.வி.க.

அவரையடுத்து அச் சொல்லை மேலும் பரவலாக பலரிடம் கொண்டு சென்றது, பெரியார்.

 

Leave a Reply

Your email address will not be published.