சென்னை:

மிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், தெலுங்கானா மாநில கவர்னராக நியமிக்கப்பட்டு உள்ள நிலை யில், அவர் தனது மாநில தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதையடுத்து காலியாக உள்ள தலைவர் பதவியை பிடிக்க தமிழக பாஜகவினரிடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது.

ஆனால், பாஜக தலைமையோ, சூப்பர் ஸ்டார் ரஜினியை களமிறக்குவது தொடர்பாக பேசி வருவதாக தகவல்கள் பரவி வருகிறது. இதற்கிடையில் பாஜக தலைவர் போட்டியில் எச்.ராஜா, சிபிஆர், எஸ்.வி.சேகர், கே.டி.ராகவன், வானதி சீனிவாசன் போன்றோர் உள்ளதாக மற்றொரு புறம் தகவல்கள் பரவி வந்த நிலையில், தற்போது  முன்னாள் அதிமுக அமைச்சர் நயினார் நாகேந்திரனும், தலைவர் பதவிக்கான போட்டியில்  உள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.

தென்மாவட்ட மக்களிடையே பிரபலமான ஒருவரை நியமிக்க பாஜக விரும்பும் நிலையில், நயினார் நாகேந்திரன் அல்லது பொன்னாருக்கு வாய்ப்பு கிடைக்கலாம் என்றும்,  மேலும் நிதி வசதியில், நயினார் நாகேந்திரன் வலிமையாக இருப்பதால், அவரால் கட்சியை வலுப்படுத்தவும், மாற்றுக் கட்சிகளில் இருந்து முக்கிய நிர்வாகிகளை இழுக்க முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டு இருப்பதாக கூறப்படுகிறத. மேலும், பாஜகவின் புதிய தேசிய பொதுச் செயலாளரான பி.எல். சந்தோஷ், நயினார் நாகேந்திரன் பெயரை பரிந்துரைத்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. அதுபோல தமிழிசையும் நயினாரை பரிந்துரைத்து இருப்பதாகவும் தகவல்கள் உலா வருகின்றன.

அதேவேளையில் எச்.ராஜா மற்றும் எஸ்.வி.சேகர் போன்றோரும் தலைமை பதவியைப் பிடிக்க தங்களுக்கு வேண்டியவர்கள் மூலம் முயற்சி மேற்கொண்டு வருவதாகவும், ஆனால், அவர்களின் பேச்சு, நடவடிக்கைகள் தமிழக மக்களிடையே கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளதால், அவர்களை தலைவராக நியமிக்க பாஜக தலைமை விரும்பவில்லை என்றும் கூறப்படுகிறது.

ஆன்மிக அரசியலை தொடங்கப்போவதாக அறிவித்து, தனது ரசிகர்களை உசுப்பேற்றி வந்த ரஜினி, அரசியல் கட்சியை தொடங்குவதை  கடந்த 2 ஆண்டுகளாக தவிர்த்து வருகிறார். பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா குறித்து அவ்வப்போது பெருமை பேசும் ரஜினி, சமீபத்தில்கூட காஷ்மீர் விவகாரத்தில், மோடி அமித்ஷாவை கிருஷ்ணன், அர்ச்சுனன் ரேஞ்சுக்கு பேசி பரபரப்பை ஏற்படுத்தினார். பாஜகவின் அனுதாபியான ரஜினி, அவ்வப்போது பாஜக திட்டங்களை ஆதரித்து கருத்து தெரிவித்து வருகிறார். இதனை தொடர்ந்து தற்போது காலியாக உள்ள தமிழக பாஜக தலைவர் பதவிக்கு ரஜினியை நியமிக்க அமித்ஷா விரும்புவதாக கூறப்படுகிறது.   ரஜினியை பாஜகவுக்கு இழுக்கும் வேலையில் முக்கிய தலைகள் ரகசியமாக பேச்சு வார்த்தை நடத்தி வருவதாகவும் , அவர் சம்மதித்தால் அவரை தமிழக  பாஜக தலைவராக்க பாஜக மேலிடம்  விரும்புவதாக கூறப்படுகிறது.

இல்லையேல், தமிழக பாஜக தலைவர் பதவி நயினார் நாகேந்திரனுக்கு கிடைக்கும் வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாகவும் டில்லி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னாள் அதிமுக அமைச்சரான நயினார் நாகேந்திரன் நெல்லையைச் சேர்ந்தவர். கடந்த  2017-ம் ஆண்டு அதிமுக வில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார்.  சமீபத்தில் நடைபெற்ற மக்களவை தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்ட நிலையில், இந்தியன் யூனியன் லீக் வேட்பாளரிடம் தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.