டில்லி:

காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவர் யார் என்பதை அடுத்த வாரம் நடைபெற உள்ள காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் முடிவு செய்யப்படலாம் என்று தலைநகர் வட்டார தகவல்கள் வெளியாகி வருகின்றன.

காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்து வந்த இளந்தலைவர் ராகுல்காந்தி, நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்தை நிலையில், அதற்கு பொறுப்பேற்று தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். இதன் காரணமாக காங்கிரஸ் கட்சி தலைவர் இல்லாத நிலையில் காங்கிரஸ் தலைமை மோசமான நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது.

சோனியா காந்தி உள்பட சில மூத்த தலைவர்களை, காங்கிரஸ் தலைவர்  பதவி ஏற்கும்படி வற்புறுத்தப்பட்டனர். தற்போது யுபிஏ தலைவராக உள்ள  சோனியா காந்தியை தற்காலிகமாக பொறுப்பேற்குமாறு வலியுறுத்தியுள்ளனர். ஆனால் அவரது உடல்நிலை சரியில்லை என்று கூறி அவர் கோரிக்கைகளை நிராகரித்ததாக கூறப்படுகிறது.

தலைவர் பதவியை ஏற்க யாரும் முன்வராத நிலையில்,  காங்கிரஸ் மூத்த தலைவர் வோரா தற்காலிக தலைவராக இருந்து வருகிறார். இதையடுத்து  விரைவில் தலைவரை தேர்ந்தெடுக் கும்படி மூத்த தலைவர்கள் பலர் நெருக்கடி கொடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் அடுத்த வாரம் காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் மீண்டும் கூட வாய்ப்பு உள்ள தாக கூறப்படுகிறது. இதில் காங்கிரஸ் கட்சிக்கு அதிகாரப்பூர்வமாக தற்காலிக தலைவர் தேர்ந்தெடுக்கப்படலாம் என்றும், மூத்த தலைவர்களான முகுல் வாஸ்னிக், மல்லிகார்ஜுன் கார்கே, சுஷில் குமார் ஷிண்டே ஆகியோரில் ஒருவர் தலைவர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படலாம் என்றும் தகவல்கள் பரவி வருகின்றன.

தலித் சமூகத்தை சர்ந்த முகுல் வாஸ்னிக் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட பிரகாசமான வாய்ப்பு இருப்பதாகவும்,  இவர்களில் யாரும் விரும்பாத நிலையில், ஜோதிராதித்யா சிந்தியாவுக்கு அந்த வாய்ப்பு வழங்கப்பட வாய்ப்பு உள்ளதாகவும் காங்கிரஸ் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.