சென்னை: தமிழகத்தில் அடுத்த ஆண்டு (2021) தொடக்கத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஆட்சியை பிடிக்கவும், முதல்வர் பதவியை கைப்பற்றவும் பல கட்சிகள் திட்டமிட்டு காய்களை நகர்த்தி வருகின்றன. அரசியல் அதிரடி ஆட்டங்களை தொடங்கி உள்ளன.

இந்த நிலையில்,  தமிழகத்தின் அடுத்த  முதல்வர் ‘இவர்தான்’ என ஒருவரை சுட்டிக்காட்டி பழக்கடை நடத்தும், அருள்வாக்கு ‘சாமியார்’ ஒருவர் கொளுத்தி போட்டுள்ளார். இது, முதல்வர் பதவி காணும் தமிழக அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மட்டுமின்றி, அதிமுகவிற்குள்ளும் பூகம்பத்தை ஏற்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.

திருவாரூர் மாவட்டத்தில்  உள்ள நீடாமங்கலம்  பகுதியில் வசித்து வருபவர் செல்வராஜ். இவர் பழக்கடை நடத்தி வருகிறார். இவருக்கு  அவ்வப்போது, சாமி வருவதாக கூறி அருள்வாக்கும் சொல்வாராம். இவரது அருள்வாக்கு பலருக்கு பலித்து உள்ளதாக கூறப்படுகிறது.  ஏற்கனவே, இந்த ஆண்டு நாட்டில் கிருமியின் தாக்கம் ஏற்படும் என்று என்று தான் ஊர் மக்கள் சிலரிடம் கூறியதாகவும், ஆனால், அதை பலர் நம்பாமல் இருந்தார்கள். ஆனால், தற்போது கொரோனா  கிருமியால் பாதிப்பு ஏற்பட்ட நிலையில், பலர் உண்மை தெரிந்து தன்னை நாடி வருகிறார்கள் என்று கூறியுள்ளார்.

இந்த நிலையில், சமீபத்தில் அவர் கூறிய அருள்வாக்கு, தமிழக அரசியல் களத்தில்  பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. அப்படி என்னதான் சொன்னார் அந்த பழக்கடை சாமியார்…

இந்த பழக்கடை அருள்வாக்கு சாமியார் சமீபத்தில் கனவு ஒன்று கண்டாராம், அந்த கனவில் திருச் செந்தூர் முருகன் தோன்றியதாகவும், அவர், தன்னிடம், தமிழகத்தை மீண்டும் ஆளப்போகிறவர்,  தனது பெயரைக் கொண்டவரே என்று கூறியதாக, சிலரிடம்  தெரிவித்துள்ளார்.

தமக்கு எதிர்காலத்தில் நடப்பதெல்லாம் அவ்வப்போது, கனவில் ஏதாவதொரு வகையில் தோன்று மென்றும் அந்த சக்தியினால் பல பேருக்கு தான் சொன்னதெல்லாம் நடந்து வருவதாகவும், அதன்படி தற்போது வந்த கனவு காரணமாக, அடுத்த முதல்வர் இவர்தான் என்று கூறியதாக கூறப்படுகிறது.

இந்த கனவு தொடர்பாக, கடந்த வாரம் திருவாரூர் வந்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம், அந்த சாமியார் கூறியதாகவும்,  அப்போது அவரிடம் சில பரிகார பூஜைகளும், யாகங்களும் செய்ய அறிவுறுத்தி இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த விவகாரம் தற்போது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முருகனின் மற்றொரு பெயர் பழனி என்பதால், அடுத்த முதல்வர் பழனிச்சாமிதான் என எடப்பாடி ஆதர வாளர்கள் உற்சாகத்தில் துள்ளிக்குதிக்க, ஓபிஎஸ் ஆதரவாளர்களோ, குமுறிக்கொண்டு இருப்பதாக கூறப்படுகிறருது.

இதற்கிடையில், தமிழக பாஜக தலைவர் பெயரும் முருகன் என்பதால், பாஜக ஆதரவாளர்கள், தமிழகத்தின் அடுத்த முதல்வர் பாஜக தலைவர்தான் என்று ஒருபுறம் கொளுத்திப்போட, ஏற்கனவே முதல்வர் கனவில் மிதந்து வரும் பல தலைவர்கள் கதிகலங்கிப்போய் உள்ளதாக கூறப்படுகிறது.