சென்னை:

மிழக தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியாநாதன் ஓய்வுபெற உள்ள நிலையில், புதிய தலைமை செயலாளர் பதவிக்கு 5பேர் போட்டியிடுவதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழக அரசின் தலைமை செயலாளராக கடந்த 2016ம் ஆண்டு டிசம்பர் 23-ம் தேதி பொறுப்பு ஏற்றார் கிரிஜா வைத்தியநாதன். தமிழக அரசின் 45-வது தலைமை செயலாளராக இருந்து வரும் கிரிஜா,  ஜெயலலிதாவின் நம்பிக்கைக்கு பாத்திரமானவர். ஜெ.மறைவுக்கு பிறகும் எடப்பாடி அரசுக்கு உறுதுணையாக இருந்து வருகிறார்.

ஆனால், இவரது குடும்பத்தை சேர்ந்தவர்கள் பாஜகவில் உள்ளதால், இவரும் பாஜக ஆதரவாள ராகவே கருதப்பட்டு வருகிறார். இவரது உறவினரான எஸ்வி சேகர் பெண் பத்திரிகையாளர்கள் குறித்து அவதூறாக பேசியபோது கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க அவரை தனது பாதுகாப்பில் வைத்திருந்தாகவும் குற்றச்சாட்டுக்கள் கூறப்பட்டது. அதுபோல, ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு சம்பவத்தில், மத்தியஅரசின் உத்தரவை செயல்படுத்தும் விதமாகவே, அரசுக்கு தெரிவிக்காமல் துப்பாக்கி சூட்டுக்கு அனுமதி வழங்கியதாகவும் இவர்மீது குற்றச்சாட்டுக்கள் உண்டு.

இவ்வாறு பல்வேறு சர்ச்சைகளுக்கு இடையில் மாநில அரசு  திட்டங்களை  நிறைவேற்ற முழு ஒத்துழைப்பு நல்கி வந்தவர் என்று கூறப்படுவதும் உண்டு. இவரது பதவிக்காலம் வரும் ஜூன் 30-ம் தேதியுடன் முடிவடைகிறது.

இந்த நிலையில்,  கிரிஜா வைத்தியநாதனுக்கு எடப்பாடி அரசு நீடிக்கும் வரை பதவி நீட்டிப்பு வழங்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.  அதே வேளையில் புதிய தலைமை செயலாளரை நியமிக்கும் பணியிலும் தமிழகஅரசு தீவிரம் காட்டி வருகிறது.

இதல், 5 உயர் அதிகாரிகள் களத்தில் உள்ளதாக கூறப்படுகிறது. தற்போது, நிதித்துறை செயலாள ராக இருக்கும் சண்முகம், ஊரக வளர்ச்சித் துறை செயலாளர் ஹன்ஸ்ராஜ் வர்மா, உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டி, ராஜீவ் ரஞ்சன், வணிகவரித் துறை செயலாளர் சோமநாதன் ஆகியோரின் பெயர்கள் தலைமை செயலாளர் பதவிக்கு பரிசீலிக்கப்பட்டுவருவதாக கோட்டை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதில் யாருக்கு ஜாக்பாட் அடிக்கப்போகிறது என்பது இன்னும் ஓரிரு வாரங்களில் தெரிய வரும்.