கவுதம் கம்பீர் கூறும் ஐபிஎல் வெற்றிக் கேப்டன் யார்?

புதுடெல்லி: ஐபிஎல் அரங்கில் வெற்றிக் கேப்டனாக திகழ்பவர் ரோகித் ஷர்மாதான் என்று கூறியுள்ளார் முன்னாள் துவக்க வீரர் கவுதம் கம்பீர்.

சிறந்த ஐபிஎல் கேப்டன் யார் என்று நடத்தப்பட்ட தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில், கம்பீர் மற்றும் சஞ்சய் பங்கார் ஆகியோர் ரோகித் ஷர்மாவையும், கெவின் பீட்டர்சன் மற்றும் டேனி மோரிசன் ஆகியோர் டோனியையும் தேர்வு செய்தனர்.

கம்பீர் பேசுகையில், “ஐபிஎல் வெற்றிக் கேப்டனாக எனது தேர்வு ரோகித் ஷர்மாதான். அவரின் தலைமையிலான அணி இதுவரை 4 முறை கோப்பைகளை வென்றுள்ளது. கடைசி நேரத்தில் மீண்டெழுந்து அவரின் அணி வென்றுள்ளது.

இந்த நிலை அவரின் கேப்டன்சி திறமையைத்தான் காட்டுகிறது. சிறந்த கேப்டன் என்று கணக்கிடுகையில், அவர் தனது அணிக்கு பெற்றுத் தந்த கோப்பைகளையும் கணக்கில் கொள்வது அவசியம். சூழலுக்கு ஏற்ப சரியான முடிவு எடுப்பது இவரின் சிறப்பு” என்றார் கம்பீர்.