ரகுவைக் கொன்றது யார்?: பலியான இடத்தில் எழுதி நியாயம் கேட்கும் மக்கள்

கோவை:

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவுக்காக அ.தி.மு.க.வினர் அனுமதியின்றி வைத்த அலங்கார வளைவில் மோதி அப்பாவி இளைஞர் பலியானது கோவை மக்களை கொந்தளிக்க வைத்துள்ளது.

அந்த வாலிபர் பலியான இடத்தில் Who Killed Ragu (ரகுவை கொன்றது யார்) என்று ஆதங்கத்துடன் எழுதி நியாயம் கேட்டிருக்கின்றனர். வரும் டிசம்பர் 3-ம் தேதி அ.தி.மு.க.வினர் நடத்த இருக்கும் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவுக்காக நகரின் பல பகுதிகளில் அனுமதி இன்றி சட்டத்துக்குப் புறம்பாக பேனர்கள், பிளக்ஸ்கள், அலங்கார வளைவுகள் வைக்கப்பட்டன.

குறிப்பாக வ.உ.சி பூங்கா முதல், விமான நிலையம் வரை தொடர்ச்சியாக கட் அவுட், பேனர்கள் மற்றும் அலங்கார வளைவுகள் வைக்கப்பட்டன. இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மக்கள் அதிருப்தி அடைந்தனர். ஆனாலும் மாநகராட்சி நிர்வாகமோ, காவல்துறையோ கண்டுகொள்ளவில்லை.

இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு, இருசக்கர வாகனத்தல் சிங்காநல்லூர் பேருந்து நிலையம் சென்று கொண்டிருந்தார் ரகு என்ற இளைஞர். அப்போது, எதிர்பாராதவிதமாக அலங்கார வளைவு மோதி, ரகு கீழே விழுந்தார். அவர் சுதாரித்து எழுவதற்குள், எதிரே வேகமாக வந்த டிப்பர் லாரி ஒன்று மோதியிதல், சம்பவ இடத்திலேயே ரகு பரிதாபமாக பலியானார்.

ரங்கசாமி கவுண்டன் புதூரைச் சேர்ந்த கந்தசாமி என்பவரின் மகன் ரகு. அமெரிக்காவில் சாஃப்ட்வேர் இன்ஜினியராக பணிபுரிந்து வந்தார். திருமண பேச்சுவார்த்தைக்காக கோவை வந்தவர் பரிதாபமாக அலங்கார வளைவால் பலியானார். இந்த சோக சம்பவம் கோவை மக்களை ஆத்திரமூட்டியது.

இதையடுத்து மாநகராட்சி நிர்வாகம், அலங்கார வளைவுகளை அகற்றியது. ஆனாலும் கோவை மக்களின் ஆதங்கம் குறையவில்லை. ரகு உயிரிழந்த இடத்தில் சாலையில், Who Killed Ragu (ரகுவை கொன்றது யாரு) என எழுதி வைத்துள்ளனர். இந்தப் படத்தை சமூகவலைதளங்களில், #WhoKilledRagu என்ற ஹேஷ் டேக்கில் பதிந்து வருகின்றனர். கோவை மாநகராட்சி மற்றும் தமிழக அரசை விமர்சித்து, கருத்துகள் பதிவிட்டு வருகிறார்கள்.