கொரோனா தடுப்பு : இந்தியாவுக்கு உலக சுகாதார நிறுவனம் புகழாரம்

வாஷிங்டன்

கொரோனா தடுப்பை இந்தியா நன்கு செயலாற்றுவதாக உலக சுகாதார நிறுவனம் புகழாரம் சூட்டி உள்ளது

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்று இந்தியாவிலும் பரவி வருகிறது.  கொரோனா பரவுவதைத் தடுக்க இந்தியா பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.   ஏற்கனவே சீனா மற்றும் இத்தாலியில் வேகமாகப் பரவியது கண்டு உடனடியாக பல நடவடிக்கைகளை இந்தியா எடுத்துள்ளது.

பல மாநிலங்களில் தற்போது மக்கள் நடமாட தடை விதித்து ஊரடங்கு சட்டம் இயற்றப்பட்டுள்ளது.  கிட்டத்தட்ட நாடு முழுவதுமே வரும் 31ஆம் தேதி வரை முழுமையாக முடக்கப்பட்டுள்ளது.  தற்போது இந்தியாவில் இது இரண்டாம் கட்டத்தில் உள்ளதால் அதை அடுத்த கட்டத்துக்குச் செல்லாமல் தடுக்க இத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

உலக சுகாதார நிறுவனம் இது குறித்து, “தற்போதுள்ள சூழலில் உயிர்களைக் காக்க இந்தியா போன்ற நாடுகள் உலகிற்கு வழி காட்டி வருகின்றன.  ஏற்கனவே இந்தியா அம்மை நோய் மற்றும் இளம்பிள்ளை வாதம் ஆகியவற்றை உலகில் இருந்து அடியோடு ஒழிக்க உலகுக்கு வழிக் காட்டி உள்ளது.  அவை உலகுக்கு இந்தியாவின் பரிசு, இந்தியாவுக்கு அருமையான திறமை உள்ளது” எனப் பாராட்டி உள்ளது.