ஜெனீவா: கடந்த 24 மணி நேரத்தில் 1,83,000 க்கும் மேற்பட்ட புதிய கொரோனா தொற்றுகள் பதிவாகியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி மக்களை அச்சத்தில் ஆழ்த்தி வருகிறது. இந்த வைரசால் நாளுக்கு நாள் பாதிப்பும், பலி எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருவது மக்களிடையே பெரும், பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.

உலக அளவில் கொரோனா பாதிப்பில் அமெரிக்கா, பிரேசில், ரஷ்யாவை அடுத்து 4வது இடத்தில் இந்தியா உள்ளது. இந் நிலையில் உலகளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஜூன் 22ம் தேதி நிலவரப்படி 9,051,949 பேரை தாண்டியுள்ளது.

உலகளவில் 9,051,949 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 470,822 பேர் மரணம் அடைந்துள்ளனர். 4,842,043 பேர் குணமடைந்துள்ளனர். அமெரிக்காவில் அதிகபட்சமாக 2,356,715 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 122,248 பேர் பலியாகியுள்ளனர்.

அமெரிக்காவை அடுத்து பிரேசிலில் 1,086,990 பேரும், ரஷ்யாவில் 584,680 பேரும் தொற்று நோய்க்குப் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் ஒரு லட்சத்து 83 ஆயிரத்து 20 பேருக்கு கொரோனா தொற்று பரவி இருந்தது கண்டறியப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.