மற்ற நாடுகளிலும் எண்ணிக்கை மாறலாம் – எச்சரிக்கும் உலக சுகாதார அமைப்பு!

ஜெனீவா: சீனாவில் மாறியதுபோல், மற்ற நாடுகளிலும் கொரோனா வைரஸ் இறப்பு எண்ணிக்கை மாறக்கூடும் என்று எச்சரித்துள்ளது உலக சுகாதார அமைப்பு.

சீனாவின் வூஹான் நகரில், கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை அந்நாட்டு அரசு திருத்தி காட்டியதுபோல், மற்ற நாடுகளும் இறப்பு விகிதத்தில் மாற்றம் செய்யக்கூடும் என்று அந்த அமைப்பு கூறியுள்ளது.

சீனாவில், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் இறந்தவர்கள் எண்ணிக்கை குறைத்து சொல்லப்படுகிறது என்று அமெரிக்கா குற்றம் சுமத்தி வந்த நிலையில், சீனாவின் திருத்தப்பட்ட விவரங்களின் அடிப்படையில், பலியானோர் எண்ணிக்கை, 4,632 ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில், கொரோனா வைரஸைக் கட்டுக்குள் கொண்டு வந்தபிறகு, சீனாவைப் போல மற்ற நாடுகளும் இறப்பு விகிதத்தில் மாற்றம் செய்யக்கூடும் என உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது.

“அரசுகளால் எந்தளவுக்கு துல்லியமான தரவுகள் கொடுக்க முடிகிறதோ, அந்த அளவுக்கு தொற்று குறித்து சரியான கணிப்புகளை வெளியிட முடியும். அதனால், முடிந்தளவு சீக்கிரமே துல்லியமான மதிப்பீடுகளை அரசுகள் மேற்கொள்ள வேண்டும்” என்று மேலும் கூறியுள்ளது அந்த அமைப்பு.