பாரிஸ்: தடுப்பு மருந்து கண்டறியப்படும் வரை, நாடுகள் வைரஸ் தாக்கத்தின் இரண்டாவது அலை மற்றும் மூன்றாவது அலையை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டுமென உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.
அந்த நிறுவனத்தின் ஐரோப்பிய மண்டல இயக்குநர் டாக்டர் ஹேன்ஸ் கிளக் இதனைத் தெரிவித்தார். புதிதாக பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை குறைந்து வந்தாலும்கூட, வைரஸ் தொற்றின் அடுத்தக் கட்ட அலைகள் இருப்பதை மறுத்துவிட முடியாது என்கிறார் அவர்.
கொரோனா வெகுதூரம் எங்கும் சென்றுவிடவில்லை என்றும், அது விரைவிலேயே திரும்பலாம் என்றும் அவர் கூறியுள்ளார். எனவே, சமூகத்தில் பொது சுகாதாரம் என்பது முக்கியத்துவம் பெற்ற ஒன்றாக இருக்க வேண்டியது அவசியம் என்றுள்ளார் அவர்.
மேலும் கூறியதாவது, “இதற்கான தடுப்பு மருந்துகளை விஞ்ஞானிகள் கண்டறியலாம். ஆனால், அதற்கு குறைந்தபட்சம் இன்னும் பல மாதங்கள் ஆகலாம். நாடுகள் அடுத்தகட்ட ‍நோய் தொற்றுக்கு தயாராக இருக்க வேண்டியது அவசியம்.
முதற்கட்ட தாக்குதல் அலை ஓய்ந்த பின்னர், தடுப்பு மருந்து இல்லாத சூழலில், அடுத்த கட்ட தாக்குதல் அலைகளை சந்திக்க நாம் தயாராக இருக்க வேண்டியது அவசியம்.
நோயின் தீவிரப் பரவலிலிருந்து ஐரோப்பா மெல்ல விடுபடுகிறது என்றாலும், அது ஆபத்திலிருந்து விலகிவிடவில்லை” என்றார் அவர்.