12 ராஜ்யசபா இடங்களுக்கு காங்கிரஸ் கட்சி யாரைத் தேர்வு செய்யும்?

புதுடெல்லி: வரும் ஏப்ரல் மாதம் ராஜ்யசபாவில் காலியாகவுள்ள 12 உறுப்பினர்களின் பதவிகளுக்கு, மீண்டும் வாய்ப்பு பெறப் போகிறவர்கள் யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

மோதிலால் ஓரா, திக்விஜய் சிங் மற்றும் குமாரி சல்ஜா உள்ளிட்டவர்கள் அந்த 12 பேரில் முக்கியமானவர்கள். எனவே, இவர்களுக்கு மீண்டும் வாய்ப்புகள் வழங்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

காங்கிரஸ் கட்சியில், மூத்த ஆளுமைகள் என்ற முறையில் சிலருக்கு தொடர்ச்சியான வாய்ப்புகள் வழங்கப்படுவது வழக்கமே. ஆனால், இந்தமுறை அக்கட்சியில் புதிய குரல்கள் எழுந்துள்ளன.

கட்சியின் வளர்ச்சிக்காக இளைஞர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டுமென்ற குரல்கள்தான் அவை. இந்த இளைஞர்கள் பட்டியலில். ஜோதிராதித்யா சிந்தியா, ரன்தீப் சுர்ஜேவாலா, ஜிதின் பிரசாதா மற்றும் ஆர்பிஎன் சிங் ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

மேலும், காங்கிரஸ் கட்சியின் பிரச்சார பீரங்கியாக திகழும் பிரியங்காவுக்கும் வாய்ப்பு வழங்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால், யாருக்கு பதவி என்பது குறித்து கட்சியின் தலைமைதான் முடிவு செய்யும் என்று அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.