தமிழக சட்டமன்ற தேர்தலில் வெற்றியை தீர்மானிக்கப்போவது யார்? முதியோர்களா – இளைஞர்களா?

சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ந்தேதி நடைபெற உள்ள நிலையில், தேர்தல் வெற்றியை தீர்மானிக்கப்போவது, முதியோர்களா, இளைஞர்களா என்பது குறித்து விவாதங்கள் நடைபெற்ற வருகின்றன.

தமிழகத்தில் 80 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் 12.91 லட்சம் பேர் உள்ளதாக தலைமை தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார். இவர்களில் பெரும்பாலோர் தபால் வாக்குகளையே நம்பி இருப்பதும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. அதுபோல,  புதிய வாக்காளர்கள் 13 லட்சம் பேர் உள்ளனர். மேலும் 20வயதுள்ள இளைஞர்கள் 1 கோடியே 23 லட்சம் பேர் உள்ளனர். இதனால் இவர்களின் வாக்குகளே தேர்தல் வெற்றியை தீர்மானிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இருந்தாலும், தற்போதைய தமிழக அரசியல் களம் தகதகவென தகித்துக்கொண்டிருக்கிறது. கூட்டணிகள் சரியான முறையில் அமையாமல், கட்சிகளிடையே மனக்குழப்பம், அதிருப்தி நீடித்து வருகிறது. மேலும், 3வது அணி, 4வது அணி அமையவதற்கான சாத்தியக்கூறுகளும் உள்ளன.

இதை எல்லாம் கவனிக்கும்போது,  தமிழக தேர்தல் களம், அரசியல் கட்சியினர் எதிர்பார்ப்பதுபோல அமைவதில் சிக்கல் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், பெரும்பான்மையுடன் ஆட்சி அமையுமா என்பதும் கேள்விக்குறியாகி வருகிறது.

தமிழகத்தில் 234 தொகுதிகளில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி ஜனவரி மாதம் 20ந்தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்படி தமிழக   சட்டமன்ற தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்றவர்கள் மொத்த எண்ணிக்கை 6 கோடி 26லட்சத்து 74ஆயிரத்து 446 ஆக உள்ளது. இவர்களில் ஆண் வாக்காளர்கள்  3 கோடியே 8 லட்சத்து 38 ஆயிரத்து 473 பேர்.  பெண் வாக்காளர்கள் 3,18,28,727 பேர். மூன்றாம் பாலினத்தவர் 7,246 பேர்.

மொத்த வாக்காளர்களில் 80வயதுக்கு மேற்பட்டவர்கள் 12, 98,406 பேர். இவர்கள் விரும்பினால் தபால் வாக்குகளை செலுத்தலாம் என தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கி உள்ளது.

அதுபோல 60 முதல் 80 வயதுக்கு உட்பட்டவர்கள்  1,02,56,787 பேர்.

40 முதல் 60வயதுக்கு உட்பட்ட வாக்காளர்கள்  2,35,66,190 பேர்

30 முதல் 40வயதுக்கு உட்பட்டவர்கள் 1,38,48,056 பேர்

20 முதல் 30வயதுக்கு உட்பட்ட வாக்காளர்கள் 1,23,95,696 பேர் 

18 முதல் 19 வயதுக்கு உட்பட்ட  முதல்முறை வாக்காளர்கள் 13,09,911 பேர்.

இவர்களில் நடப்பாண்டு புதியதாக சேர்க்கப்பட்டவர்கள் மட்டும்  8,97,694 பேர். இவர்களில்  ஆண்: 4,80,953; பெண்: 4,16,423 மற்றும் மூன்றாம் பாலினம்: 318

தமிழகத்தில் 80 வயதுக்கு மேற்பட்டோர்  12.91 லட்சம் பேர் உள்ளனர். அதிகபட்சமாக சென்னையில் 1,08,718 வாக்காளர்களும், குறைந்தபட்சமாக நீலகிரியில் 8,253 வாக்காளர்களும் உள்ளதாக தமிழக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.  இவர்களுக்கு தேர்தல் ஆணையம் தபால் வாக்கு போட அனுமதி வழங்கி உள்ளதால், வயது முதிர்வு காணமாக வீட்டிலேயே முடங்கி உள்ள அவர்கள், தங்களது வாக்குகளை யாருக்கு செலுத்தப்போகிறார்கள் என்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இவர்களில் பெரும்பாலோர் திமுகவுக்கு எதிரான மனநிலையில் உள்ளவர்கள் என்பதை மறுக்க முடியாது. அதனால்தான், திமுக தரப்பில், முதியோர்களுக்கு தபால் வாக்கு வழங்கக்கூடாது என எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வந்தது.

அதே வேளையில், இளம் தலைமுறை வாக்காளர்களை எடுத்துக்கொண்டால், பெரும்பாலோர், திராவிட கட்சிகளை தவிர்க்கவே விரும்புகின்றனர். பாரம்பரியமான அரசியல் குடும்பத்தை சேர்ந்த இளைஞர்களை தவிர பெரும்பாலான இளைஞர்கள்,  நாம் தமிழர் கட்சி, கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் போன்ற கட்சிகளை ஆதரிக்கவே விரும்புகின்றனர். அந்த கட்சி தலைவர்களின்  அறிவிப்புகள், ஊழல் ஒழிக்கப்படும் போன்ற அறிவிப்புகள் மாற்றத்தை விரும்பும்  இளைஞர்களிடையேபெரும் வரவேற்பு பெற்றுள்ளது என்பதை மறந்துவிட முடியாது.

இந்த சவால்களுக்கு இடையேதான், திமுக, அதிமுக போன்ற கட்சிகள் களத்தில் வெற்றிபெறும் நோக்கில் இறங்கியிருக்கிறது.  இரு கட்சிகளும், மக்களுக்கு இலவசங்களை வாரி வழங்கி,  தமிழக மக்களை சோம்பேறிகளாக்கியதுடன், ஜாதி ரீதியிலாக மக்களை பிரித்தாழும் சூழ்ச்சியில் ஈடுபட்டு வருவதையும் நன்றாகவே உணர்ந்துள்ளனர்.

இலவசங்களை வாரியிறைத்து, இளைஞர்களின்  வாழ்வதார உரிமையை வடநாட்டவர்கள் பறிக்க காரணமாக இருந்தவர்கள் திமுக, அதிமுக போன்ற கட்சிகள்தான் என்பதை  இன்றைய இளைஞர்கள் நன்றாகவே தெரிந்து வைத்துள்ளனர். அதனால் அவர்களின் வாக்குகள் எந்த அளவுக்கு திராவிடக் கட்சிகளுக்கு கிடைக்கும் என்பது தெரியவில்லை.

இதுமட்டுமின்றி, அரசு வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு கிடைத்துள்ளதால், வன்னியர்களின் வாக்குவங்கிகள் பிரியும் என எதிர்பார்க்கப்படுவதுடன்,

மேலும், எடப்பாடி அரசின் விவசாய கடன் தள்ளுபடி, 6 சரவன் நகைகளுக்கான கடன் தள்ளுபடி, பெண்களின் சுயஉதவிக்குழுக்களின் கடன்கள் தள்ளுபடி போன்றவையும் கிராமப்புற மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இவைமட்டுமின்றி பாஜக, சசிகலா போன்றோர் ஆடும் சதிராட்டமும், தேர்தலில் வாக்குகளை பிரிக்கும் என நம்பப்படுகிறது. இதனால், தமிழக அரசியல் களம் தகதகவென தகித்துக்கொண்டிருக்கிறது.

இந்த நிலையில்,  சட்டமன்ற தேர்தல் வெற்றித்தோல்வியை நிர்மாணிப்பதில்,  இளைஞர்களின் பங்கும், முதியோர்களின் பங்கும்தான் முக்கிய காரணியாக இருக்கப்போகிறது என நம்ப்படுகிறது.

கூட்டணி கலாட்டா-6: 2016 சட்டமன்ற தேர்தல் முடிவுகள் 2021 தேர்தலில் எதிரொலிக்குமா?