கடந்த 12 மாதங்களில் அடுத்தடுத்து 5 முக்கிய தலைவர்கள் காலமாகிவிட்டதால், பாரதீய ஜனதாவில், டெல்லியில் கோலோச்சக்கூடிய தலைவர்களுக்கான வெற்றிடம் ஏற்பட்டுள்ளதாக சில அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கிறார்கள்.

அடல் பிகாரி வாஜ்பாய் தொடங்கி, மனோகர் பாரிக்கர், சுஷ்மா ஸ்வராஜ், அனந்த் குமார் மற்றும் அருண் ஜெட்லி போன்றவர்கள் அடுத்தடுத்து மறைந்துள்ளனர். இதில், கடந்த 2004ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணியிடம் பாரதீய ஜனதா தோற்றதையடுத்து, அக்கட்சியின் டெல்லி முகமாக உருவானவர்கள் அருண் ஜெட்லி, சுஷ்மா ஸ்வராஜ் மற்றும் அனந்த் குமார்.

இந்த மூன்று தலைவர்களும், தற்போதைய துணை ஜனாதிபதி வெங்கைய்யா நாயுடுவுடன் இணைந்து 2014ம் ஆண்டு மோடி ஆட்சிக்கு வரும்வரை, சுமார் 10 ஆண்டுகள் காங்கிரஸ் கூட்டணி அரசை சமாளித்துக் கொண்டிருந்தனர்.

கட்சியின் டெல்லி முகங்களாக இருந்த இந்த தலைவர்கள் மறைந்துவிட்டதால், தற்போது டெல்லியில் அதிக நேரம் செலவிடாத மூத்த தலைவர்களையே அக்கட்சி கொண்டுள்ளது. கடந்தகாலங்களில், நாடாளுமன்றத்திற்கு உள்ளும் வெளியிலும் அருண் ஜெட்லி மற்றும் சுஷ்மா ஸ்வராஜ் போன்றோர் கட்சி அடையாளமாகவும் பாதுகாவலர்களாகவும் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.