தூத்துக்குடி மக்களவை தொகுதி -2009 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட புதிய தொகுதி. தூத்துக்குடி, திருச்செந்தூர், கோவில்பட்டி, விளாத்திகுளம், திருவைகுண்டம், ஒட்டப்பிடாரம் ஆகிய 6 சட்டபேரவை தொகுதிகள் இதில் அடங்கும்.

தி.மு.க.வின் கனிமொழி, பா.ஜ.க.வின் தமிழிசை சவுந்தரராஜன் அ.ம.மு.க,வின் புவனேஸ்வரன் ஆகியோர் பிரதான வேட்பாளர்கள்.

கனிமொழி, தமிழிசைக்கு அறிமுகம் தேவை இல்லை. புவனேஸ்வரனுக்கு பூர்வீகம் திருவை குண்டம் பக்கத்தில் உள்ள ஆழ்வார்தோப்பு. தூத்துக்குடி தெற்கு மாவட்ட இளைஞர் பாசறை செயலாளராக இருக்கிறார்.

டி.டி.வி. தினகரனுக்கு ஆதரவாக இருக்கும் முக்குலத்தோர் ஓட்டுகள், இரு முஸ்லிம் அமைப்புகள் அ.ம.மு.க.கூட்டணியில் இருப்பதால் சிறிதளவு கிடைக்கும் அந்த சமூக வாக்குகள் என புவனேஸ் வரனுக்கு 75 ஆயிரம் முதல்  1லட்சம் ஓட்டுகள் வரை கிடைக்கலாம் என  கணிக்கப்பட்டுள்ளது.

தமிழிசை –ஏன் தூத்துக்குடிக்கு வந்தார் என்பது  தெரியவில்லை. அவரது கட்சிக்கு பெரிதாக அடித்தளம் கிடையாது. அ.தி.மு.க.ஓட்டுகளை மட்டுமே பிரதானமாக நம்பி இருக்கிறார். ஸ்டெர்லைட்  ஆலை விவகாரம் தமிழிசையின் வெற்றிக்கு பெரிய தடைக்கல்.

உயர் சாதியினருக்கு மோடி அறிவித்த இடஒதுக்கீடு- தமிழிசைக்கு ஓரளவுக்கு வாக்குகளை பெற்றுத்தரும்.. அமைச்சர் கடம்பூர் ராஜுவும் , முன்னாள் அமைச்சர் சண்முகநாதனும் தமிழிசைக்காக ஓடியாடி உழைக்கிறார்கள். கோவில்பட்டி பகுதியில் கடம்பூர் ராஜூ ஓரளவு வாக்குகளை பெற்றுக்கொடுப்பார்.

கனிமொழி சார்பில் சில மாதங்களுக்கு முன்பாகவே தேர்தல்  வேலைகள் தொடங்கி விட்டன. வேட்பாளர் பட்டியல் வெளியாவதற்கு பல நாட்கள் முன்னதாகவே கனிமொழியை  மாவட்ட செயலாளர் கீதா ஜீவன் –வேட்பாளராக அறிவித்து  சர்ச்சையை ஏற்படுத்தியது தனிக்கதை.

தொகுதியில் கணிசமாக உள்ள சிறுபான்மை ஓட்டுகள் பெரும் அளவில் கனிமொழிக்கு கிடைக்கும். தி.,மு.க. கூட்டணியில் உள்ள காங்கிரஸ், ம.தி.மு.க. மற்றும் இடதுசாரிகளுக்கு ஆங்காங்கே வாக்குகள் உள்ளன.

தூத்துக்குடி மக்களவை தொகுதியில் தி.மு.க.வுக்கு இரண்டு எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். அவர்கள் இருவரும் (திருச்செந்தூர் எம்.எல்.ஏ.அனிதா ராதாகிருஷ்ணன்-, தூத்துக்குடி எம்.எல்.ஏ.கீதாஜீவன்) தங்கள் தொகுதியில் கனிமொழிக்கு அதிக வாக்குகளை வாங்கி கொடுப்பார்கள்.

இப்படி நிறைய சாதகமான அம்சங்கள் இருப்பதால் தூத்துக்குடியில் கனிமொழி ஜெயிப்பதற்கே அதிக வாய்ப்புகள் உள்ளன.

எத்தனை ஆயிரங்கள் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெல்லப்போகிறார் என்பதே  இப்போதைய கேள்வி.

–பாப்பாங்குளம் பாரதி