வேலூர்:

வேலூர் மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 5ந்தேதி நடைபெற்ற நிலையில், இன்று காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.

பணப்பட்டுவாடா காரணமாக நிறுத்தப்பட்ட வேலூர் மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் கடந்த 5ந்தேதி நடைபெற்று முடிந்தது. 72 சதவிகிதம் வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த தேர்தலில்  அதிமுக கூட்டணி சார்பில், புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம், திமுக சார்பில், திமுக எம்எல்ஏ மற்றும் பொருளாளர் துரைமுருகனின் மகன்  கதிர் ஆனந்த், நாம் தமிழர் கட்சி சார்பில் தீபலட்சுமி உள்பட  28 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

வாக்குப்பதிவு வேலூர் மக்களவை தொகுதியில் உள்ள 553 வாக்குச்சாவடிகளில் நடைபெற்றது. வாக்குப்பதிவு முடிவடைந்ததும், வாக்குப்பதிவு  எந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன், வாலாஜா பேட்டையில் உள்ள ராணிப்பேட்டை பொறியியல் மற்றும் கலைக் கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டன.

வாக்கு எண்ணும் மையத்திற்கு மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. துணை ராணுவத்தினர் 75 பேர், சிறப்பு போலீசார் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பர்வேஸ் குமார் தலைமையில், 2 ஏடிஎஸ்பிக்கள், 6 டிஎஸ்பிக்கள் என 2 ஆயிரத்து 100 பேர் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இன்று காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. வேலூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட  குடியாத்தம், அணைக்கட்டு, வேலூர், கேவி குப்பம், வாணியம்பாடி, ஆம்பூர் என 6 சட்டமன்றத் தொகுதிகள் மற்றும் ஒப்புகைச் சீட்டுகள் எண்ணிக்கைக்கென 7 மையங்கள் அமைக்கப்பட்டு, ஒவ்வொரு மையத்திலும் 14 மேசைகள் அமைக்கப்பட்டு வாக்கு எண்ணிக்கை நடைபெறுகின்றன.

வாக்கு எண்ணிக்கையை கண்காணிக்க ஒரு கட்சிக்கு தலா 15 முகவர்கள் உள்ளே அனுமதிக்கப் பட்டு இருப்பதாக தேர்தல் அலுவலர் தெரிவித்து உள்ளனர். மேலும், ஒவ்வொரு சுற்றாக வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்த பின்னரே அடுத்த சுற்று தொடங்கும் என்று தெரிவித்தார். வாக்கு எண்ணிக்கை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு தேர்தல் ஆணையத்தில் வெளியாகும் என்றும் அவர் கூறினார். வாக்கு மையங்களுக்கு செல்போன்களை எடுத்துச் செல்ல அனுமதி இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்த உடன், ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும் ஐந்து வாக்கு எந்திரங்கள் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு, ஒப்புகைச் சீட்டுகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கப்பட உள்ளது.