உலக கோப்பை யாருக்கு? இந்தியாவுக்கு நெருக்கடியை தர இருக்கும் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, ஆப்கானிஸ்தான் அணிகள்

டில்லி:

லகக் கோப்பை கிரிக்கெட்2019 வரும் 30ந்தேதி இங்கிலாந்தில் தொடங்க உள்ள நிலையில், உலக கோப்பையை கைப்பற்ற ஆட்டத்தில் பங்கேற்றுள்ள 10 நாடுகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன.

இந்த ஆண்டு உலக கோப்பையை இந்தியா தட்டிவரும் என அனைத்து தரப்பினரும் நம்பிக்கை யுடன் காத்திருக்கையில், ஆட்டத்தின்போது, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, ஆப்கானிஸ்தான் அணிகள் கடும் நெருக்கடியை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உலககோப்பை கிரிக்கெட் அணியின் கேப்டன்கள்

வரும் 30ந்தேதி முதல் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ள நிலையில், தற்போது பயிற்சி  ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன.  இதையடுத்து உலக கோப்பையை வெல்வது யார் என்ற எதிர்பார்ப்பு உலக கிரிக்கெட் ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

உலக கோப்பையில் ஆடும்  10நாடுகளை சேர்ந்த அனைத்த  அணிகளும் அறிவிக்கப்பட்டு விட்டன. இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் வரும் மே 30 ஆம் தேதி போட்டிகள் தொடங்கி ஜூலை 14 வரை என மொத்தம் 48 போட்டிகள் நடைபெற உள்ளது.

45 லீக் போட்டிகள் மற்றும் 3 நாக் அவுட் போட்டிகள் என 12 நகரங்களில் ஆட்டம் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்கும் 10 அணிகளும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும்.  லீக் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெறும்.

ஜூன் 5-ந்தேதி இந்தியா முதல் போட்டியில் தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்கிறது. இந்த போட்டி பகல் நேர போட்டியாகும். இங்கிலாந்தில் உள்ள  ஹாம்ப்ஷயர் பவுல், சவுத்தாம்ப்டன் நகரில் போட்டி நடைபெறுகிறது.

2வது போட்டி  ஜூன்  9ந்தேதி இந்தியா v ஆஸ்திரேலியா (பகல்)  அணிகளுக்கு இடையே திஓவல் மைதானத்தில், லண்டனில் நடைபெறுகிறது.

3வது போட்டி,  13 ஜூன் – இந்தியா v நியூசிலாந்து(பகல்) ட்ரெண்ட் பிரிட்ஜ், நாட்டிங்காதில் நடைபெறுகிறது.

4வது போட்டி 16 ஜூன்  அன்று  இந்தியா v பாகிஸ்தான் (பகல்) இடையே போட்டி நடைபெற உள்ளது.

5வது போட்டி  27 ஜூன்  அன்று  வெஸ்ட்இண்டீஸ் v இந்தியா (பகல்) இடையே  ஓல்ட்டிராஃபோர்ட், மான்செஸ்டரில் நடைபெறுகிறது.

6வது போட்டி,   22 ஜூன்– இந்தியா v ஆப்கானிஸ்தான் (பகல்) ஹாம்ப்ஷயர் பவுல், சவுத்தாம்ப்டனில் நடைபெற உள்ளது.

7வது போட்டி,   30 ஜூன்  – இங்கிலாந்து v இந்தியா (பகல்) எட்க்பாஸ்டன், பர்மிங்காமிலும்,

8வது போட்டி  2 ஜூலை – வங்காளதேசம் v இந்தியா (பகல்) போட்டியும் பர்மிங்காமிலும் நடைபெறுகிறது.

9வது போட்டி  6 ஜூலை – இலங்கை v இந்தியா (பகல்) ஹெட்பிங்லே, லீட்ஸ்சில் நடைபெற உள்ளது.

எதிர்பார்ப்புக்குரிய நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா–இந்தியா இடையிலான ஆட்டம் ஜூன் 9–ந்தேதி லண்டன் ஓவலில் நடைபெறுகிறது. இந்த போட்டி மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. கோப்பையை வெல்ல வாய்ப்பு உள்ளதாக கருதப்படும் ஆஸ்திரேலியா, இந்தியா அணிகளுக்கு இடையே நடைபெறும் போட்டி என்பதால் உலக கிரிக்கெட் ரசிகர்களிடையே பலத்த எதிர்பார்ப்பை உருவாக்கி வருகிறது.

இறுதிப்போட்டி லண்டன் லார்ட்சில் ஜூலை 14–ந்தேதி நடக்கிறது. ஜூலை 15–ந்தேதி இறுதிப்போட்டிக்குரிய மாற்று நாளாக வைக்கப்படும்.

தற்போதைய நிலையில் உலககோப்பை ஆட்டத்தில் விளையாட உள்ள இந்திய அணியினர் கேப்டன் விராட் கோலி தலைமையில் இங்கிலாந்துக்கு சென்றுள்ளனர். கடந்த சில ஆண்டுகளாக கோலி தலைமையிலான இந்திய அணியினர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் நிலையில், உலக கோப்பை போட்டியிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள் என்று நம்பப்படுகிறது.

இந்திய அணியில் முன்பு உள்ள ஆட்டக்காரர்களை விட தற்போது  ஃபாஸ்ட் பவுலிங் யூனிட் வலுவாக உள்ளது. பும்ரா, புவனேஷ்வர் குமார், ஷமி ஆகியோர் எதிரணிகளை  மிரட்டும் வகையில் தங்களது திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். அதுபோல, ஸ்பின்னிங்கில் குல்தீப் – சாஹல் ஜோடி‘ மிரட்டுகிறது. இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்டிங்கும் வலுவாக உள்ளது.

இதனால் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா உள்பட மற்ற அணிகளுக்கு இந்தியா சிம்மசொப்பனமாக திகழும் என்பதில் சந்தேகமில்லை.

அதேவேளையில்  நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலிய அணிக்கு  ஸ்மித் மற்றும் வார்னர் திரும்பி யிருப்பதால் ஆஸ்திரேலிய அணியும் வலுவாக உள்ளது. அதுவும் மீண்டும் உலக கோப்பையை தட்டிச்செல்ல முனைப்பு காட்டி வருகிறது.

இந்த நிலையில் இங்கிலாது கடந்த சில ஆண்டுகளாக மற்ற அணிகளை மிரட்டி வரும் தற்போது ஆக்ரோஷமாக ஆடி வரகிறது. கேப்டன் இயன் மோர்கன், ஜேசன் ராய், பட்லர், பேர்ஸ்டோ, ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ்  என பலம் வாய்ந்த அணியாக உள்ளது.

அதேவேளையில், ஆட்டம் முழுவதும் அவர்கள் சொந்த நாடான இங்கிலாந்தில் நடைபெற உள்ளதால்,  உலக கோப்பையை வெல்ல இங்கிலாந்துக்கு மேலும்  வாய்ப்பு இருப்பதாக நம்பப்படுகிறது.

இந்த நாடுகளுக்கும் எல்லாம் சவால் விடும் வகையில் வங்கதேசமும் களமிறங்கி உள்ளது. சமீபத்தில்,   வங்கதேச ஆல்ரவுண்டர் ஷாகிப் அல் ஹசன் கூறும்போது,  இந்தியாவும் இங்கிலாந்தும் கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணிகளே. ஆனால் இந்த முத்திரை போதுமா? உலகக்கோப்பையை வென்று விட முடியுமா? ஒரு தொடரை வெல்ல கடினமான ஆட்டத்தை களத்தில் இறங்கி ஆட வேண்டும், காகிதத்தில் ஆடுவது அல்ல…என்று சாடியிருந்தார்.

அதுபோல உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் குறித்து கருத்து தெரிவித்துள்ள ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் ஆடம் கில்கிரிஸ்ட், இந்த உலகக்கோப்பையை ஆஸ்திரேலிய அணி தான் வெல்லும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

உலககோப்பை கிரிக்கெட் இங்கிலாந்து அணியினர்

அதேவேளையில் ஆப்கானிஸ்தான் அணியையும் குறைவாக மதிப்பிட முடியாது. கடந்த ஆண்டு நடந்த ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் தனது அதிரடி ஆட்டம் காரணமாக  2வது இடத்தை பிடித்திருந்தது. தற்போதும் வலுவான நிலையில் உள்ள ஆப்கானிஸ்தான்அணி,  பாகிஸ்தான், வங்காளதேச அணிகளையும்  தோற்கடித்து மேலும் பலம் வாய்ந்த அணியாக வலுப்பெற்றுள்ளது. அணியின் ஹீரோவாக   சுழற்பந்து வீச்சாளர் ரஷித்கான் திகழ்ந்து வருகிறார். அவரைத் தொடர்ந்து  முகமது நபி அற்புதமான ஆல்-ரவுண்டர். முஜீப் ரகுமானும் சிறப்பாக சுழற்பந்து வீசக்கூடியவர். இவர்களும் உலக கோப்பை கிரிக்கெட்டில் மற்றவர்களுக்கு கடும் நெருக்கடி கொடுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது….

ஒவ்வொரு நாட்டு கிரிக்கெட் ரசிகர்களும் தங்களது அணியே உலக கோப்பையை தட்டிவரும் என ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர். ஆனால், கோப்பை யாருக்கு என்பது  லண்டன் லார்ட்சில் ஜூலை 14–ந்தேதி  நடைபெற உள்ள இறுதிப்போட்டியில்தான் தெரிய வரும்.