ஐதராபாத்: 2019 ஐபில் இறுதிப் போட்டியில் வெறும் 1 ரன் வித்தியாசத்தில், நான்காவது முறையாக கோப்பை வெல்லும் வாய்ப்பை சென்னை அணி தவறவிட்டாலும், அந்த அணியின் பந்து வீச்சாளரான இம்ரான் தாஹிர், சிறந்த பந்து வீச்சுக்கான ஊதா நிற தொப்பியை பெற்றுள்ளார்.

தென்ஆப்ரிக்காவைச் சேர்ந்த லெக் ஸ்பின்னரான இவர், தன் கணக்கில் மொத்தம் 26 விக்கெட்டுகளை எடுத்து, இந்த பரிசைப் பெற்றுள்ளார்.

நேற்றைய இறுதிப் போட்டியில் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய இவரின் பந்துவீச்சு சிறப்பானதாக இருந்தது. இவருக்கு கடும் போட்டியாக இருந்த டெல்லி அணியின் காகிசோ ரபாடாவை 1 விக்கெட் வித்தியாசத்தில் பின்தள்ளிவிட்டார்.

அதிக ரன்கள் எடுத்த வீரருக்காக வழங்கப்படும் ஆரஞ்சு நிற தொப்பியை பெற்றவர் ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர்.

ஐதராபாத் அணிக்காக விளையாடிய அவர், 12 போட்டிகளில் எடுத்த மொத்த ரன்கள் 692. இவருக்கு அடுத்த நிலையில், அதிக தொலைவு தள்ளி, 593 ரன்களுடன் நிற்பவர் பஞ்சாப் அணியின் லோகேஷ் ராகுல்.