டில்லி:

எனது இயக்கத்தில் இணைபவர்கள் தேர்தலில் போட்டியிடமாட்டேன் என்று உறுதி அளிக்க வேண்டும் என்று அன்னா ஹசாரே தெரிவித்துள்ளார்.

டில்லியில் விவசாயிகள் பிரச்னை, லோக் ஆயுக்தா ஆகியவற்றை வலியுறுத்தி ராம்லீலா மைதானத்தில் சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கியுள்ளார்.

அப்போது அவர் கூறுகையில்,‘‘எங்களது இயக்கத்தில் இணைபவர்கள் உறுதியளிப்பு பத்திரத்தில் கையெழுத்திட வேண்டும். அதில் எந்த கட்சியிலோ அல்லது குழுவிலோ இணைந்து தேர்தலில் போட்டியிட மாட்டேன் என உறுதியளிக்க வேண்டும்.

நாடு, சமூகத்திற்கு சேவை செய்து நல்ல பழக்க வழக்கங்களை கடைபிடிப்பேன் என்பதை உறுதிப்படுத்த வேண்டும். எனது மேடைக்கு எந்த அரசியல் கட்சியையோ அல்லது எந்த குழுவை சேர்ந்தவர்களையோ அனுமதிக்க மாட்டேன்’’ என்றார்.

அன்னா ஹசாரே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இதேபோல் ஊழலுக்கு எதிராக போராட்டம் நடத்தினார். இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட அரவிந்த் கெஜ்ரிவால், பின்னர் ஆம் ஆத்மி என்ற கட்சியை ஆரம்பித்து டில்லி தேர்தலில் போட்டியிட்டு ஆட்சியை பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.