முன்பெல்லாம், பட வெளியீட்டின் போது, அந்தந்த படத்தின் ஃபிலிம் ரோல் அந்தந்த தியேட்டர்களுக்குத் தரப்படும். அதைவைத்து படம் திரையிடப்படும்.

கால மாற்றத்தில் புது டெக்னாலஜி வந்தது. அதாவது, சென்னையில் ஓரிடத்தில் இருந்து படத்தை ஒளிரப்பினால், எந்தெந்த தியேட்டர்களில் படம் திரையிட வேண்டுமோ அங்கே படம் ஓடும்.

அதாவது டி.வி. ஒளிபரப்பு, டிஷ் ஆண்டனா டெக்னாலஜி போல.

இப்படி படங்களை திரையிடும் நிறுவனம்தான் கியூப். இது ஒவ்வொரு தியேட்டருக்கும் ஒரு நாளைக்கு  இத்தனை ஆயிரம் என்று கட்டணம் நிர்ணயித்திருக்கிறது. (காட்சி கணக்கல் கிடையாது.)

தவிர, விளம்பரங்களை ஒளிபரப்பி தனியாக பணம் வசூலித்துவிடுகிறது.

திரையங்கத்தில் ஒளிபரப்பும் கட்டணத்தைக் குறைக்க வேண்டும் என்று கியூப் நிறுவனத்துக்கு எதிராக தமிழ்த்திரையுலகம் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகிறது.

இதனால் பலதரப்பினருக்கும் பாதிப்புதான் என்றாலும், கியூப் கட்டணம் குறைக்கப்பட்டால்தான் திரையுலகம் பிழைக்க முடியும் என்பதால் அனைவரும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து ஈடுபட்டுள்ளார்கள்.

ஆனால் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் முருகதாஸ் இயக்க, விஜய் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு இன்று ஆரம்பித்துள்ளது.

இதனால் ஒட்டுமொத்த திரையுலகமும் விஜய் மீதும் சன் பிக்சர்ஸ் மீதும் கடும் ஆத்திரத்தில் இருக்கிறது. முருகதாஸ் மீதும்தான்.

“பெரிய நடிகர்களுக்கு ஒரு நியாயம்,எங்களுக்கு ஒரு நியாயமா” என்று படப்பிடிப்பை நிறுத்தி வைத்துள்ள சிறு பட தயாரிப்பாளர்கள் கொந்தளிக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.

அதே நேரம், “விஜய் நடிக்கும் படத்தின் சண்டைக்காட்சிகள்தான் தற்போது படமாக்கப்பட்டு வருகிறது.  இவை இதுவரை தமிழ்த்திரையுலகில் இல்லாத அளவுக்கு  பிரம்மாண்டமாக எடுக்க திட்டமிட்டிருக்கிறோம்  அதற்காக தெலுங்கு திரையுலகின் மிக பிரபலமான – பிஸியான – ஸ்டண்ட் மாஸ்டர்களான ராம்-லஷ்மன் இருவரும் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார்கள்.

இவர்களை இப்போது விட்டால் திரும்ப சில மாதங்கள் கூட ஆகலாம்.அதுவரை போட்டு வைத்த செட்டை பாதுகாப்பதற்கு பெரிய அளவில் பணம் செலவாகும். ஆகவதான் படப்பிடிப்பை நடத்துகிறோம்” என்கிறது சன் பிக்சர்ஸ் தரப்பு.

ஆனாலும் திரையுலகின் பல துறைகளைச் சார்ந்தவர்களின் வாட்ஸ்அப் க்ரூப்களில் விஜய்யை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். ஒட்டுமொத்த திரையுலகமும் விஜய் மீது ஆத்திரத்தில் இருக்கிறது என்றே சொல்லத்தோன்றுகிறது.