ஓங்கிய எடப்பாடியின் கை! – பாஜகவும் ஒரு கை பார்க்குமா?

அதிமுகவில் தனது செல்வாக்கின் மூலம், தன்னை முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்க வைத்தவர் தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. ஆனால், அவரின் தேர்வை பாரதீய ஜனதாவின் டெல்லி தலைமை ஒப்புக்கொள்ளவேயில்லை.

சில நாட்களுக்கு முன்னர், தமிழகத்திற்கான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முதல்வர் வேட்பாளரை அகில இந்திய பாரதீய ஜனதா தலைமைதான் அறிவிக்கும் என்று அதன் தமிழக பிரமுகர் ஒருவர் கூறும் அளவிற்கு பாரதீய ஜனதா எடப்பாடியை வெறுத்து வருகிறது.

ரஜினியை முன்வைத்து ஒரு அணியைக் கட்டமைத்து, அதிமுகவையும் இரண்டாக உடைத்து, அதன் இரட்டை இலை சின்னத்தை முடக்கி, திமுக vs பாஜக அணி என்ற வகையில், தேர்தல் களத்தை அமைத்துக் கொள்ளலாம் என்று பாஜ திட்டமிட்டு வருவதாகவே கூறப்பட்டு வந்தது.

ஆனால், தள்ளாத வயதிலுள்ள சூப்பர் ஸ்டார், எதிர்பார்த்ததைப் போலவே ஜகா வாங்கிவிட்டதால், தற்போது பாஜகவின் திட்டத்தில் பெரியளவில் மண் விழுந்துள்ளது. முடிந்தவரை மோதிப் பார்க்கலாம் என்ற மனநிலையில் இருந்த எடப்பாடியின் கை, தற்போது பெரியளவில் ஓங்கிவிட்டது.

இனிமேல், பாஜக, அதிமுகவை உடைத்து இரட்டை இலையை முடக்கினால், அது திமுகவுக்கு இன்னும் பெரும் வலிமையைத் தந்துவிடும். அவர்களின்(திமுக) வெற்றி கற்பனைக்கெட்டாத ஒன்றாக மாறிவிடும். எனவே, பாஜகவால் அதிமுகவை உடைக்க முடியாது.

ஆனாலும், தனிப்பெரும்பான்மையுடன் மத்தியில் ஆள்பவர்கள் என்ற முறையில், அக்கட்சியின் ஈகோ, அவ்வளவு எளிதில் அடங்கிவிடாது என்றே நம்பப்படுகிறது. எனவே, எடப்பாடியை மடக்கி பணிய வைக்க, அவர்கள் பல்வேறு உத்திகளையும் கையாள்வார்கள்.

அதேசமயம், சிறையிலிருந்து வெளியேவரும் சசிகலா, பாஜகவின் திட்டத்திற்கு ஒத்துப்போவாரா என்பது தெரியவில்லை. ஆனால், எடப்பாடி, அதிமுகவில் பெரியளவில் வலிமை பெறும்போது, சசிகலா வேறுமாதிரி யோசிக்கமாட்டார் என்றும் கூற முடியாது. பாஜகவின் எந்த திட்டத்திற்கும் ஒத்துழைக்க பன்னீர் செல்வம் தயாராகவே இருக்கிறார்.

எனவே, எடப்பாடியின் கை ஓங்கினாலும், பாஜகவும் ஒரு கை பார்க்க நினைத்தால், அதிமுகவின் நிலை இன்னும் அதகளமாகி, தமிழக தேர்தல் களம், வேறொரு நிலைக்குச் சென்றாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை..!