3வது நாள்: யாருடைய காலில் விழ வேண்டும்! ரசிகர்களுக்கு ரஜினி விளக்கம்

சென்னை,

டிகர் ரஜினிகாந்த் தனது ரசிகர்களுடனான சந்திப்பு இன்று 3வது நாளாக நடைபெற்று வருகிறது.

நேற்று ரசிகர்களுடன் பேசிய ரஜினி, ஒவ்வொருவருக்கும் குடும்பம்தான் முக்கியம் என்றும்,  ரசிகர்களை சந்தித்தது மகிழ்ச்சி அளிப்பதாகவும், அவர்களுக்காக பிரார்த்தனை செய்வதாகவும் கூறினார்.

இந்நிலையில் இன்று ரசிகர்களுடனான சந்திப்பின்போது ரஜினி பேசும்போது யாருடைய காலில் விழா வேண்டும் என்று விளக்கி கூறினார்.

கடவுள் மற்றும் தாய் தந்தையின் காலில் மட்டும்தான் விழ வேண்டும் என்று ரசிகர்களிடம்  ரஜினிகாந்த் வலியுறுத்தினார்.

ரசிகர்கள் மத்தியில் பேசிய நடிகர் ரஜினி, “கொஞ்சம் கூட சலிப்பு இல்லாமல் இருக்கும் உங்கள் முகத்தை பார்க்கும்போது எனக்கு உற்சாகமாக உள்ளது.

1976-ல் மதுரைக்கு முதல் தடவை சென்றிருந்தேன். மீனாட்சியம்மன் கோவிலில் அர்ச்சகர் என்ன நட்சத்திரம் என கேட்டார். ஆனால் எனக்கோ நட்சத்திரம், கோத்திரம் தெரியாது. பின்னர் பெருமாள் நட்சத்திரத்தில் அர்ச்சனை செய்தார்கள். அதன்பின் தெரிந்தது எனது நட்சத்திரம் கூட பெருமாள் நட்சத்திரம்தான் என்று.

மதுரை என்றாலே வீரம்தான். மதுரை, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து வந்துள்ளீர்கள். உங்களுக்கு கிடா வெட்டி கறி சோறு போட ஆசை. ஆனால் ராகவேந்திரா திருமண மண்டபம் சைவம் என்பதால் வேறு ஒரு இடத்தில் எனது ஆசையை நிறைவேற்றுவேன்.

பார்க்கும்போது உங்களின் உற்சாகம் மற்றும் உணர்ச்சியை புரிய முடிகிறது. ஏனென்றால் நானும் உங்களைப்போல சினிமா ரசிகனாக இருந்து எல்லாவற்றையும் தாண்டி வந்தவன்தான்.

சிறுவயதில் பெங்களூருவில் இருக்கும்போது ராஜ்குமாரின் பெரிய ரசிகன் நான். சிவாஜி கணேசன், எம்ஜிஆர் இரண்டுபேரும் சேர்ந்தால் எப்படி இருக்கும் அப்படி அவர். நானும் சென்று அவரை டச் பண்ணிருக்கேன் என்ற ரஜினி,

ரசிகர்கள் புகைப்படம் எடுக்கும்பேது எனது காலில் விழ வேண்டாம்.  ரசிகர்களை தன் காலில் விழ வேண்டாம் என்று நான் அடிக்கடி சொல்வதுண்டு.

நாம் மூன்று பேர் காலில் தான் விழ வேண்டும். நமக்கு உயிர் கொடுத்த கடவுள், உடல் கொடுத்து உயிர்பித்த தாய், தந்தை ஆகிய மூன்று பேரின் காலில் மட்டுமே விழ வேண்டும்.

அடுத்ததாக பெரியவர்களின் காலில் விழ வேண்டும். அது எதற்காகவென்றால், வாழ்க்கை என்கிற பாதை கஷ்டங்கள், துன்பங்கள், சோகங்கள், சோதனைகள் நிறைந்தது. அந்த பாதையை கடந்து வந்தவர்கள் பெரியவர்கள். நாமும் அதில் நடந்து வரப் போகிறோம். எனவே அவர்கள் காலில் விழ வேண்டும். மற்றபடி பணம், புகழ், அதிகாரம் உள்ளவர்கள் கால்களில் விழ அவசியம் இல்லை என்றார்.

நடிகர் ரஜினிகாந்த் ரசிகர்களுடனான சந்திப்பு. 6 நாட்கள் நடைபெற உள்ள இன்று 3வது நாளாக நடைபெற்று வருகிறது.