சென்னை:

மிழக முதல்வராக எடப்பாடியை அழைத்திருப்பதை வரவேற்ற ஸ்டாலின், பெரும்பான்மையை நிரூபிக்க 15 நாட்கள் அவகாசம் ஏன் என்று கேள்வி எழுப்பி உள்ளார். இதன் காரணமாக குதிரை பேரம் நடக்க வாய்ப்புள்ளதாகவும் கூறியுள்ளார்.

அதிமுகவில் சசிகலாவுக்கும், ஓபிஎஸ்க்கும் நடைபெற்ற மோதலை தொடர்ந்து, சசிகலாவின் ஆதரவாளரான எடப்பாடி பழனிச்சாமி தமிழக முதல்வராக அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார்.

அதைத்தொடர்ந்து இரண்டு முறை கவர்னர் வித்யாசாகர் ராவை சந்தித்து, ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்க கோரினார். இந்நிலையில், இன்று காலை எடப்பாடியை ஆட்சி அமைக்க கவர்னர் அழைத்துள்ளார். இன்று மாலை 4 மணிக்கு எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் புதிய தமிழக அமைச்சரவை பதவி ஏற்கிறது.

இதுகுறித்து, தமிழக எதிர்க்கட்சி தலைவரும், திமுகவின் செயல்தலைவருமான மு.க.ஸ்டாலின் கூறியதாவது,

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக குழப்பமான நிலை இருந்தது, உடனடியாக ஆட்சி அமைய திமுக சார்பில் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். கவர்னரை சந்தித்தும் எடுத்து கூறியிருந்தோம்.

கவர்னர் அறிவிப்பு காலம் கடந்து வெளியிட்டாலும் உள்ளபடியே வரவேற்கத்தக்கது. 15 நாட்களுக்குள் என்பது பெரிய அவகாசம், இது ஏன் என்பது எனக்கு தெரியவில்லை . இதற்குள் பல குதிரை பேரங்கள் நடக்க வாய்ப்புள்ளது. இவ்வாறு ஏதும் நடக்காமல் கவர்னர் பார்த்து கொள்ள வேண்டும். கவர்னர் ஜனநாயகத்தை காப்பார் என நம்புகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.