விஜயகாந்தை அ.தி.மு.க. கெஞ்சுவது ஏன்?

டந்த மக்களவை தேர்தலில் தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளிலும் தனியாக நின்ற அ.தி.மு.க. இந்த முறை,பெரும் பட்டாளத்தையே துணைக்கு சேர்த்துள்ளது.

ஏற்கனவே பா.ஜ.க.,பா.ம.க.,புதிய தமிழகம் ஆகிய கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்கியாகி விட்டது. நேற்று புதிய நீதிக்கட்சிக்கு ஒரு இடம் கொடுத்து விட்டது.ஜி.கே.வாசனுக்கு ஓர்  இடம் உண்டு.

கொழுத்த புழுக்களை மாட்டியும் -தூண்டிலில் சிக்காத விலாங்கு மீன்போல் போக்கு காட்டிக்கொண்டே போகிறது- தே.மு.தி.க.

உடல் நலம் விசாரிக்கும் சாக்கில் அ.தி.மு.க.ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ் நேற்று சாலிகிராமம் வீட்டில் விஜயகாந்தை சந்தித்து பேசினார்.

7 லோக்சபா+ ஒரு ராஜ்யசபா என்பதில் விடாப்பிடியாக இருந்தார்- கேப்டன்.போனசாக இடைத்தேர்தல் நடைபெறும் 21 சட்டசபை தொகுதிகளில் 2 இடங்களும் கேட்க-

பேச்சு வார்த்தை தொங்கலில் இருக்கிறது.

விஜயகாந்தை அ.தி.மு.க.கெஞ்சுவது ஏன்?

டெல்லி பா.ஜ.க. தலைவர்களின் நிர்ப்பந்தம் என்று இந்த பேச்சு வார்த்தைக்கு முலாம் பூசப்பட்டாலும் – ஒரே காரணம் 21 தொகுதி சட்டசபை இடைத்தேர்தல் மட்டுமே. மக்களவை தேர்தல் வெற்றி குறித்து அ.தி.மு.க.வுக்கு துளியும் கவலை கிடையாது.

மதுரை வந்திருந்த அமீத்ஷா, இது தொடர்பாக ஓ.பி.எஸ்.சை கடிந்து கொண்டது வேறு விஷயம்.

இடைத்தேர்தலில் ஜெயித்தால் தான் ஆட்சியில் தொடர முடியும் என்பதால்- அதனை மட்டுமே குறி வைத்து பயணிக்கிறது அ.தி.மு.க.

இந்த நிமிடத்தில் – சில தொகுதிகளின் வெற்றியை அ.தி.மு.க. உறுதி செய்து விட்டது. பா.ம.க .இருப்பதால்- பாப்பிரெட்டிபட்டி தொகுதியில் பல்லாயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அ.தி.மு.க. வெல்வது நிச்சயமாகி உள்ளது.

புதிய தமிழகம் கிருஷ்ணசாமி- ஒரு முறை தனித்தே  நின்று வென்ற இடம் ஒட்டப்பிடாரம்.  கடந்த தேர்தலில் அங்கு மிகவும் சொற்ப ஓட்டுகளில் தான் அவர் தோற்றார். அவர் இப்போது அ.தி.மு.க. கூட்டணியில் இருப்பதால் ஒட்டப்பிடாரமும் உறுதி. விளாத்திகுளம், சாத்தூர்,பரமக்கு டி தொகுதிகளில் புதிய தமிழகத்துக்கு கணிசமான ஓட்டுகள் உள்ளது.அ.தி.மு.க.வுக்கு இந்த ஓட்டுகள் பெரிதும் சாதகமாக இருக்கும்.

வட மாவட்டங்களில் இடைத்தேர்தல் நடைபெறும் அரை டஜன் தொகுதிகளில் வெற்றியை தீர்மானிக்கும் சக்தியாக   பா.ம.க.வும், தே.மு.தி.க.வும் உள்ளன.பா.ம.க. ஏற்கனவே கூட்டணியில் இருக்கிறது.விஜயகாந்தும் துணைக்கு  வந்தால் –அந்த பெல்டிலும் வெற்றி அடைந்து- அதன் மூலம் மெஜாரிட்டியை பெற்று எஞ்சியுள்ள இரண்டு சொச்சம் வருடங்களை ஓட்டி விடலாம் என்பது ஈபிஎஸ் மற்றும் ஒபிஎஸ்சின்  கணக்கு.

இது தான் –விஜயகாந்தை- அ.தி.மு.க.அளவுக்கு அதிகமாகவே கெஞ்சுவதன் காரணம்.

–பாப்பாங்குளம் பாரதி

 

கார்ட்டூன் கேலரி