மதுரை:

மிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய மேலவளவு கொலை குற்றவாளிகளை, முன்கூட்டியே தமிழகஅரசு விடுவித்தது ஏன், அவர்கள்  சமூகத்துக்கு முக்கியமானவர்களா? மதுரை உயர்நீதி மன்றம் காட்டமாக கேள்வி எழுப்பி உள்ளது.

மதுரை மாவட்டம் மேலூரை அடுத்துள்ள மேலவளவு ஊராட்சி மன்றத் தலைவர் முருகேசன் உட்பட 7 பேர், 1997-ம் ஆண்டு ஜூன் 30-ம் தேதி பேருந்தில் சென்றுகொண்டிருந்தபோது, ஒரு கும்பல் பேருந்தை வழிமறித்து 6 பேரையும் படுகொலை செய்தது. அதுபோல,  மற்றொரு இடத்தில்  7 பேரை மற்றொரு  கும்பல் படுகொலை செய்தது.

இந்த வழக்கில் 17 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தனர். ஆனால், அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு, 2008-ம் ஆண்டடு 5 பேர் விடுக்கப்பட்ட நிலையில், எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மீதமுள்ள 13 நபர்களும் விடுவிக்கப்பட்டனர்.

இந்த விடுதலையை எதிர்த்து, மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு  நீதிபதிகள் எஸ். வைத்தியநாதன், என். ஆனந்த் வெங்கடேஷ் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது,  ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட மேலவளவு குற்றவாளிகள் 13 பேர் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டதற்கு  கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதிகள்,   13 பேர் முன்கூட்டியே விடுதலைக்கான அரசாணை மற்றும் ஆவணங்களுடன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.

மேலும், ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகள் முன்கூட்டியே விடுதலையானது வருத்தமளிக்கிறது என்று கூறிய நீதிபதிகள்,  கடும் குற்றச்சாட்டுக்கு உள்ளான வழக்கில் குற்றவாளிகளை முன்கூட்டியே விடுவிப்பது சமூகத்தில் பயம் குறைந்து குற்றங்கள் அதிகாரிக்கும் நிலையை ஏற்படுத்தும் என்றும்,  மனித உயிர் மற்ற எல்லாவற்றையும் விட மிக முக்கியமானது என்றும், இவ்வளவு வேகமாக 13 பேரையும் விடுதலை செய்ய வேண்டிய அவசியம் என்ன? அந்த 13 பேரும் சமூகத்துக்கு மிகவும் முக்கியமானவர்களா? என்று சரமாரியாகக் கேள்வி எழுப்பினர்.

மேலும், தருமபுரி பேருந்து எரிப்பு வழக்கிலும் இதுபோன்ற நிலையே நீடித்தது என்றும் தங்களது வருத்தத்தை கிளை நீதிபதிகள் பதிவு செய்தனர்.