Random image

திரைப்படங்களுக்கு ஏன் வரிவிலக்கு கேட்கிறீர்கள்? திரையுலகினருக்கு டிடிவி ‘சுளீர்’

சென்னை:

ரசு வழங்கும் இலவசங்கள் தவறு என்றால், திரைப்படங்களுக்கு ஏன் வரி விலக்கு கேட்கிறீர்கள் என்று திரையுலகினருக்கு டிடிவி தினகரன் சுளீர் என்று நாக்கை பிடுங்குகிற மாதிரி கேள்வி விடுத்துள்ளார்.

சர்கார் படத்தில் தமிழகஅரசு வழங்கிய  விலையில்லா பொருட்களை அடித்து நொறுக்குவது போன்றும், அரசு மற்றும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை விமர்சித்தும் காட்சிகள்  அமைக்கப்பட்டிருந்தது.

மேலும் படத்தில் மக்கரு குக்கருமா போய் தரைல உக்காருமா? என்று பாடல்  டிடிவி தினகரனை கிண்டல் செய்வது போல  இடம் பெற்றுள்ளதால் டிடிவியும் கோபத்தில் உள்ளார்.

இந்த பிரச்சனை கடந்த இரண்டு நாட்களாக பெரும் கொந்தளிப்பை தமிழகம் முழுவதும் ஏற்படுத்தியுள்ளது. அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். விஜய் ரசிகர்கள் ஆசை ஆசையாய் வைத்த பேனர்கள் கிழிக்கப்பட்டது. பல இடங்களில் விஜய் ரசிகர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

அதிமுகவினர் போராட்டம் காரணமாக பாதுகாப்பு கருதி, திரையரங்குகளில் காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. சர்க்கார் படத்தின் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்யவும் முயற்சிகள் எடுக்கப்பட்டது. அவர் தலைமறைவாகி முன் ஜாமின் பெற்றுள்ளார்.

இதையடுத்து, படம் மீண்டும் மறுதணிக்கை செய்யப்பட்டு நேற்று மாலை காட்சி முதல் புதிய பிரிண்ட் வெளியிடப்பட்டது.

இநத் நிலையில், விஜய்க்கு ஆதரவாக  எந்தவொரு முக்கிய அரசியல் கட்சியும் வெளிப்படையாக வாய் திறக்கவில்லை. நடிகர் விஜய்யும்,வாய் திறக்காமல் மவுனமாகவே இருந்து வருகிறார்.

இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன்,  சர்கார் படத்தில் விலையில்லா பொருட்கள் வழங்கியதை விமர்சிப்பவர்கள் சினிமாவுக்கு மட்டும் ஏன் வரிவிலக்கு கேட்கிறீர்கள் என்று திரையுலகினருக்கு காட்டமாக கேள்வி விடுத்தார்.

சர்கார் படத்தின் மூலமாக தனது அரசியல் அறிவு இவ்வளவுதான் என்பதை நடிகர் விஜய் வெளிக் காட்டி இருக்கிறார்  என்றும்,  நடிகர்கள் உள்பட எல்லோரும் அரசியலுக்கு வரவேண்டும் என்று நினைப்பது தவறு கிடையாது. மேலும் இந்தியா வளர்ச்சியடைந்த நாடு கிடையாது.

‘சர்கார்’ படம் வியாபார நோக்கத்துடன் எடுக்கப்பட்ட படம். மக்களுக்கு கருத்துகளை சொல்வ தற்காக எடுக்கப்பட்ட ‘டாக்குமென்ட்ரி’ படம் கிடையாது. நடிகர்-நடிகைகளும் சம்பளம் வாங்கிதான் நடித்திருப்பார்கள்.

விலையில்லா பொருட்கள் தவறு என்று நினைத்தால் எல்லா நடவடிக்கைகளையும் சினிமாவில் காட்டியிருக்க வேண்டும் என்று தினகரன் கூறினார்.

இலவச லேப்டாப், இலவச சைக்கிள் மற்றும் மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகை என அனைத்தையும் அவர்கள் இவ்வாறுதான் கருதுவார்களா?

எல்லாவற்றையும் விமர்சிப்பதாக இருந்தால் இலவச டி.வி.க்களையும், அதில் ஒட்டியிருந்த படத்தையும் எரிப்பது போல காட்டியிருக்க வேண்டும். இதில் நடுநிலையும் இல்லை.

இந்தியா ஒன்றும் முன்னேறிய நாடு அல்ல. வளர்ந்து வரும் நாடுதான். எனவே இது மக்களுக்கு அவசியமான ஒன்றுதான். ஜெயலலிதா உயிருடன் இருந்த சமயத்தில் சர்கார் படத்தை வெளி யிட்டிருந்தால் படக்குழுவினரை பெரிய வீரர்கள் என கருதலாம்.

வியாபார நோக்கம் மட்டுமே இப்படத்தில் உண்டு. மேலும் அரசியலுக்கு எப்படியாவது வரவேண்டும் என்பதை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். அவர்களது புரிதல் அவ்வளவுதான்.

இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வகையில் வீழ்ச்சி கண்டிருக்கிறது. நாட்டில் பண மதிப்பு நீக்க நடவடிக்கையால் எல்லா தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டு உள்ளனர். பண மதிப்பு நீக்க நடவடிக்கை மூலம் நாட்டின் பொருளாதாரம் பாதாளத்துக்கு சென்று விட்டது. கருப்பு பணம் எவ்வளவு ஒழிந்தது என்பதை அரசு தான் சொல்லவேண்டும் என்று மத்திய அரசுக்கும் கேள்வி விடுத்தார்.

இந்திய பொருளாதாரம் 50 சதவீதம் வரை பணமாக புழங்கக்கூடியது தான். இதை எப்படி கருப்பு பணம் சென்று சொல்ல முடியும்? எனவே இந்த நடவடிக்கை தோல்வி தான். மக்களுக்கு பாதிப்பு தான். எனவே பணமதிப்பு நீக்க நடவடிக்கை கொண்டு வரப்பட்ட தினத்தை ஒரு கருப்பு தினமாகவே கருதமுடியும்.

இவ்வாறு டிடிவி கூறினார்.