புதுடெல்லி: மத்திய பட்ஜெட் சமர்ப்பிக்கப்பட்டுவிட்டாலும்கூட, மத்திய நிதியமைச்சக அலுவலக பகுதிகளுக்குள் விதிக்கப்பட்ட பத்திரிகையாளர் தடை இன்னும் விலக்கிக்கொள்ளப்படவில்லை.

பிரஸ் இன்ஃபர்மேஷன் ப்யூரோ(பிஐபி) அங்கீகாரம் பெற்ற பத்திரிகையாளர்கள் உள்பட, எந்தப் பத்திரிகையாளராக இருந்தாலும், நிதி அமைச்சகத்தின் அதிகாரிகளின் அனுமதி பெற்ற பிறகே உள்ளே நுழைய முடியும் என்ற நிலை உள்ளது.

பத்திரிகையாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது தொடர்பாக எந்த அதிகாரப்பூர்வ உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை என்று நிதியமைச்சக செய்தித் தொடரபாளர் கூறியுள்ளார். இதுபோன்ற தடையுத்தரவு நீடிப்பது இதுதான் முதல்முறை என்று கூறப்படுகிறது.

ஏனெனில், பொதுவாக, பாதுகாப்பு மற்றும் வெளியுறவு அமைச்சகங்கள் செயல்படும் அலுவலகப் பகுதிகள் தவிர, பிற அமைச்சகங்களின் அலுவலகப் பகுதிகளுக்குள் பத்திரிகையாளர்கள் சுதந்திரமாக உலவலாம். அதேசமயம், பட்ஜெட் தாக்கலாகும் சமயத்தில் மட்டும், ஏதேனும் தகவல்கள் கசிந்துவிடக்கூடாது என்பதால், அந்த காலகட்டத்திற்கு மட்டுமே தடைவிதிக்கப்படும்.

ஆனால், தற்போது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுவிட்ட பிறகும், தடையுத்தரவு வாபஸ் பெறப்படாமல் இருப்பதுதான் கேள்விகளை எழுப்பியுள்ளது.