பெங்களூரு: நிலவின் தென்பகுதியை ஆராய இந்தியா சமீபத்தில் ஏவியுள்ள சந்திரயான் – 2 விண்கலம், நிலவைச் சென்றடைய 48 நாட்கள் எடுத்துக்கொள்ளும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, ஏன் இத்தனை நாட்கள் என்ற கேள்விகளும் எழுந்துள்ளன.

ஏனெனில், கடந்த 1959ம் ஆண்டு முன்னாள் சோவியத் யூனியன் நிலவுக்கு அனுப்பிய லூனா – 2 விண்கலம், நிலவை அடைய எடுத்துக்கொண்ட நேரம் வெறும் 34 மணிநேரங்களே.

அடுத்த 10 ஆண்டுகள் கழித்து 1969ம் ஆண்டு மனிதர்களுடன் அமெரிக்கா அனுப்பிய அப்போலோ – 2 விண்கலம் நிலவை அடைய எடுத்துக்கொண்ட நேரம் 4 நாட்கள், 6 மணிநேரங்கள் மற்றும் 45 நிமிடங்கள்.

ஆனால், சந்திரயான் – 2 விண்கலத்திற்கு இத்தனை நாட்கள் ஆகிறது என்றால், அதற்கான பதில், ராக்கெட் கட்டுமானம், நிரப்பப்பட்டுள்ள எரிபொருளின் அளவு மற்றும் அதன் வேகம் ஆகியவற்றில் அடங்கியுள்ளது.

அப்போலோ – 2 ஐ தூக்கிச்சென்ற சாடர்ன் – 5, ஒரு மணிக்கு 39000 கி.மீ. வேகத்தில் சென்றது குறிப்பிடத்தக்கது. ஆனால், சந்திரயான் தொடர்பான அம்சங்கள் வேறுமாதிரியானவை. சந்திரயான் – 2 மேற்கொள்ளும் நிலவை நோக்கியப் பயணம் நேரானது இல்லை. புவியில் ஈர்ப்புவிசையை சமாளிக்க சுற்றுப்பாதையை தேர்வு செய்துள்ளது இஸ்ரோ.

மேலும் சந்திரயானை சுமந்துசெல்லும் ஜிஎஸ்எல்வி-எம்கேIII, வெறும் 4 டன்கள் எடையை மட்டுமே சுமக்கும் திறன் வாய்ந்தது. இத்தகையப் பல்வேறு காரணங்களினாலேயே சந்திரயான் – 2, நிலவை அடைவதற்கு 48 நாட்கள் எடுத்துக்கொள்ளும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.