சாம் கர்ரனை முதலில் இறக்கியது சரிதான்! – ஆனால் இத்தனை ‘டாட்’ பந்துகளா?

துபாய்: ஐதராபாத் அணிக்கெதிராக நடைபெற்ற போட்டியில், சென்னை அணி ஆடிய ‘டாட்’ பந்துகளின் எண்ணிக்கை விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

ஐதராபாத் அணிக்கெதிரான நேற்றையப் போட்டியில், 20 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது சென்னை அணி. இந்த ஐபிஎல் தொடரில், ‍நேற்றுதான் முதலில் பேட்டிங் செய்தது சென்னை அணி.

அதேசமயம், ‍முதல் ‘பவர்பிளே’ யில் ரன்களை அடிக்க வேண்டுமென்பதற்காக, துவக்க வீரராக சாம் கர்ரனை களமிறக்கினார் தோனி. அவர் 21 பந்துகளில் 31 ரன்களை அடித்தார்.

இதனால், சென்னை அணிக்கு சுமாரான துவக்கம் கிடைத்தது. ஷேன் வாட்சன் ஒன்-டவுன் இறங்கினார்.

முதல்முறையாக பேட்டிங் களமிறங்கியதால், சென்னை அணி பெரிய ஸ்கோரை எட்டும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், எடுத்த ரன்கள் வெறும் 167தான். அதுவும், ஜடேஜாவின் அதிரடியால் கிடைத்தவை.

இதற்கு காரணம், நேற்று சென்னை அணி ஆடிய டாட் பந்துகள். மொத்தமாக சென்னை அணி ‍நேற்று 48 டாட் பந்துகளை ஆடி அதிர்ச்சியளித்துள்ளது.

நேற்று சென்னை அணி 9 சிக்ஸர்கள் மற்றும் 12 பவுண்டரிகளை அடித்தது. மொத்தமாக 102 ரன்கள் இதன்மூலமாக கிடைத்தன. கூடுதலாக கிடைத்த ரன்கள் 4.

இதன்படி, ஓடி எடுத்தது 61 ரன்களே. டாட் பந்துகள் அடிப்படையில் வீணாக்கிய 8 ஓவர்களை முறையாக ஆடியிருந்தால், நேற்று சென்னை அணி 200 ரன்களைக் கடந்திருக்கலாம். எனவே, இனிவரும் போட்டிகளிலாவது சென்னை அணி உருப்படியாக ஆடுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.