நெட்டிசன்:
காபி எதற்காக? – டாக்டர் சீர்காழி ஜி. சிவசிதம்பரம் எம்.டி
எங்கிருந்தோ ஜென்மம் எடுத்து வந்திருந்தாலும், தென் இந்தியாவிற்கு குறிப்பாக தமிழத்திற்கே உரித்தான தனி முத்திரை காபி! உபசரிப்பிற்கும், உபகாரத்திற்கும், உள்ளன்பிற்குமான மந்திரச்சொல் காபி! பானங்களில் பாடம் படிக்காமலேயே டிகிரி வாங்கிய பட்டதாரி காபியே!
விபரம் தெரிந்த நாள் முதல் காபியே குடிக்காதவன் அடியேன். இப்போது நல்ல காப்பிக்கு அடிமை என ஆனது தனிக்கதை! பாவேந்தர் பாரதிதாசன் எழுதிய “காபி எதற்காக” என்ற பாடலின்படி காபி – டீயை தவிர்த்தே எனது பால பருவம் அமைந்தது. ஏதோ ஒருவித வெறுப்பு இருந்தது. பழுப்பு நிற திரவம், அதை ஆவி பறக்க கஷ்டப்பட்டு விழுங்கி சுவைக்க ஆலாய்ப் பறக்கும் ஒரு கூட்டம், இதில் “ஸ்ட்ராங் பத்தலை” என்று சொல்லி கூடுதல் டிகாஷன் வாங்கி அதிக பழுப்பேற்றி, ஒரு காப்பியை இரண்டாக ஆக்கிப் பகிரும் கூட்டம், காலையில் பல் கூட விளக்காமல் சூடாக ‘பெட் காபி’ கையில் உடனே கிடைத்தால் போதும் என நினைக்கும் கூட்டம், என பல தினுசாக பலதரப்பட்ட காபி ரசிகர்களை, குறிப்பாக எனது வட்டத்தில் நான் அதிகம் கண்ட சங்கீதக்காரர்கள்,

மருத்துவத்துறையில் கண்ட செவிலியர்களைப் பார்த்தாலே பாவமாக இருக்கும். பல நேரங்களில் எங்கள் ஊர் பக்கம் சிறு குழந்தைகளுக்குக் கூட பால் பாட்டிலில் காபியை ஊற்றிக் கொடுப்பதை பார்த்து வியந்திருக்கிறேன். எனது தந்தை வழி பாட்டி திருமதி அவயாம்பாள் சிவசிதம்பரம் ‘ஆத்தா’ அவர்கள் வயதான காலத்திலும் அதிகாலை ஐந்து மணிக்கே எழுந்து சமையல் அறையில் காபி பில்டர் பாத்திரத்தை உருட்டிக் கொண்டிருப்பதையும், சொந்த பந்தங்கள் வீட்டிற்கு வந்தால் அவர்களுக்கென ‘பெரிய வட்டா டம்பளரில் ஒரு சேரு காபி’ என்பதை ஒரு கெளரவத்தின் அடையாளமாக கொண்டு, சற்றே சிறிய டம்ளராக இருந்துவிட்டால் கனிவும் கடுமையும் கலந்த பாவனையுடன் ‘நயன பாஷையில்’ என் அன்புத் தாயார் சுலோசனா கோவிந்தராஜன் அவர்களை கண்டிப்பதைக் கண்டு சிறுவனாக சிரித்து இருக்கிறேன். இப்படி உறவுகள் மேம்படவும் காபி குடும்பத்தோடு ஒன்றி விட்டது. அப்பா இசைமணி சீர்காழி கோவிந்தராஜன் இசையில் தன் பாட்டுத் திறத்தால் உலகளாவிய ரசிகர்களை தன்னகத்தே கொண்டிருந்தாலும், அம்மா கையால் மணக்கும் அதிகாலை டிகிரி பில்டர் காபிக்கு பரமார்த்த ரசிகர். அதிகாலை நேரத்தில் எங்கள் உறக்கத்தைக் கலைப்பது, காதில் விழும் எம்.எஸ் அம்மாவின் சுப்ரபாதமும், மூக்கில் படும் பில்டர் காபி மணமும் தான்.
அதுவரை பால்மணம் மாறாத பாலகனாய் காபியை அறியாமல் இருந்த நான், பயிற்சி மருத்துவ னாக மருத்துவப் பணியில் நுழைந்த காலத்தில் இரவு நேரப் பணியில் உற்சாக பானமாக தெளிவூட்டி விழித்திருக்க என் வாழ்வில் நுழைந்தது காபி. முன்னிரவு நேரங்களில் சுறுசுறுப்பை ஊட்டவும், வேலை குறைவான தருணங்களில் எங்களின் அரட்டைக் கச்சேரிக்கும் சுவை சேர்த்தது.
பல நேரங்களில் மருத்துவர்களுக்குள் நோய் தீர்க்கும் முறைகள் குறித்து போட்டியிட்டு பந்தயம் வைக்கும்போது, பரிசாக வைக்கப்பட்டதும் காபியே! சூடான காபி ஒரு நட்புப் பாலம்!செவிலித் தாயான எங்கள் இளம் நர்சுகள் சிரிக்கப் பேசி தங்கள் அன்புக் கரத்தால் கொடுக்கும் காபியை எப்படி மறுக்க தோன்றும்? இது உண்மையா என்று என் மூத்த வகுப்பு மருத்துவரான எனது அக்கா டாக்டர் ஞானவல்லி பிரதாபன், பக்கத்து வார்டில் இருந்து நேரில் வந்து புலன் விசாரித்து, வீட்டில் போட்டுக்கொடுப்பதும் நடக்கும்.

எனக்கென தனி பிளாஸ்க் குடுவையில் தனியாக பால் வாங்க அனுப்பி பணியாளர் களை அனாவசி யமாக சிரமப்படுத்தக் கூடாது என்ற எண்ணமே காபி தடைக்கு விடை கொடுத்துவிட்டது. எப்படி இருந்த நான்.. இப்படி ஆயிட்டேன்… என்று, ‘எதனால் நமக்கு சிறு வயதில் காபி பழக்கத்தை பெற்றோர் வற்புறுத்தவில்லை’ என்ற கேள்வியை பின்னர் எழுப்பி எனக்குள் சிந்தித்தபோது, – ‘உற்சாகத்தைத் தந்து உள்ளே இழுத்து, தினசரி ஒருவிதமான காபி நேர தலைவலி கொடுத்து, அதற்குத் தானே மருந்தாகி நிவாரணமும் தந்து, வசப்படுத்தி, வேலை நேரத்தையும் காபி நேரமாக்கி, சில நேரங்களில் அடிமைப்படுத்தி, வெலவெலக்க வைத்து, ‘காபியில்லாமல் நானில்லை’ என்று பாடக்கூட வைத்துவிடும் உண்மை புரிந்தது’.
ஆனாலும், புத்துணர்ச்சி வேண்டுகிற சமயங்களில், அது கச்சேரி பாடுகிற மேடையாக இருந்தாலும், முக்கிய பணியிடங்களாக இருந்தாலும், மறுமலர்ச்சியை முகமலர்ச்சியோடு ஏற்படுத்தித் தருவதில் காபிக்கு நிகர் காபியேதான்! ‘அதனால் நான் காபிக்கு மாறிட்டேன்’!
காபியின் சுவையை வர்ணிப்பது அழகை விமர்சிப்பதைப் போன்றது. ஒருவர் கண்ணுக்கு அழகாக இருப்பது, அடுத்தவன் கண்ணுக்கு அழகாய் இருக்காது. மாமி கையால் கொழ கொழவென குழைவான சுண்டக் காய்ச்சிய நுரை பொங்கும் பாலில், இதோ நான் வலுவாக இருக்கிறேன் என்று கட்டியம் கூறும் மேல் பக்கக் கூடுதல் டிகாஷன் சொட்டுக் கோலத்துடன், புத்தம் புதிய பில்டர் பொடி மணக்க வரும் வலிமையான காபி நம்மைப் படுத்தும் பாடும், காவிரிக்கரைப் பகுதிகளில் சற்று நீரோட்டம் அதிகம் இருந்தாலும், வீட்டுக்கு வீடு அன்போடு தருகின்ற காபி, மிகச்சூடாக தொண்டையில் இதமாக இறங்கி, காபி மணம் மாறாமல் நீண்ட நேரம் நம் நாக்கிலும் நெஞ்சிலும் நிற்பதும், நகர வாழ்க்கையில் ஆரூடம் சொல்பவர்களும், கணக்கு பார்க்கும் ஆடிட்டர்களும் மிகச் ‘சிறிய மினியேச்சர் டம்ளர்களில்’ இன்ஸ்டண்ட் வகை காபிகளால் தங்கள் புத்தியை தீட்டி கூர்படுத்தவும் வந்தாரை உபசரிக்கவும்,
ஐந்து நட்சத்திர ஹோட்டல்களிலும் காபி மெஷின்களிலும் வகைவகையாக எக்ஸ்பிரசோ, டபுள், கபே லாட்டே, கப்புசினோ என கசமுசாவென பெயர்களுடன், இது போதாதென்று நுரையில் வரைந்த மிதக்கும் டிசைன்களுடன் என வரிசை கட்டி நிற்பதும், ‘பேஷ் பேஷ்’ நரசுஸ் காபி, வாசன் காபி, லியோகாபி, கிருஷ்ணா காபி, கும்பகோணம் டிகிரி காபி, நாங்கள் விரும்பி பயன்படுத்தும் மயிலை அப்பு தெரு புவனேஸ்வரி காபி, திருவாரூர் பிரபாவின் பாரத் காபி, காலங்காலமாய் முத்திரை பதித்துக்கொண்டிருக்கும் மதுரை நியூ காலேஜ் ஹவுஸ் காபி என காபி பொடியின் ஆதி மூலத்தை, ரகசியங்களை பாமரனும் ஆராய வைப்பது என்பதும், தமிழகத்தில் காபிக்கே உண்டான தனிச் சிறப்பு! காபி சுவைஞர்களுக்குள் பட்டி மண்டபமே நடக்கும்!
காஞ்சிப் பெரியவர் மகான் ஸ்ரீ மஹாஸ்வாமிகள் வேடிக்கையாக ‘சுக்லாம்பரதரம் விஷ்ணும்’ ஸ்லோகத்தை காபியோடு ஒப்பிட்டதையும், வைஷ்ணவார்த்த அறிஞர் ஸ்ரீ சீனி வேங்கடாச்சாரி யார் அதே ஸ்லோகத்தை கழுதையோடு உபமானமாக ஒப்பிட்டதையும் அம்மொழி அறிஞர்கள் சொல்வார்கள்! அதுவும் காபியின் புகழுக்குக் கிடைத்த சிறப்புத்தானே!
பொதுவாக பெரியவர்களுள் காபி கொடுத்து உபசரிப்பவர்களைப் போலவே, இருதய படபடப்பை ஏற்படுத்தும் காபியைக் குடிக்கக்கூடாது என்று அறிவுரைத்தவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அத்தகைய எண்ணத்தில் தான் பாவேந்தர் பாரதிதாசன் காபியை தவிர்த்துவிட்டு சுக்கு மல்லியை அதற்கு பதிலாக சாப்பிடச்சொன்னார். Caffeine – கபீன் எனும் வேதியப் பொருள் காபியின் விஷமப் பலன்களுக்கும், அதே நேரத்தில் வீரியத்திற்கும் ஆதாரமாகிறது. மறுபக்கம், Coffee மணத்தில் செய்யப்பட்ட Toffee மிட்டாய்களும் கிடைக்கிறது. காபி பித்தத்தால் நரை முடியை தலையில் இளமையிலேயே கூட்டுகிறது, ஆனால் மூளையை சுறுசுறுப்பாக்குகிறது என்றும் சொல்லப்படுகிறது. இப்படி பிரபலங்களை போலவே, முரண்பாடுகளைக் கொண்ட கொண்ட பிரபலம் காபி!

கல்யாணப்பரிசு படத்தில் ஏ.எம்.ராஜா அவர்கள் இசையில், எனதருமைத் தந்தையார் சீர்காழி கோவிந்தராஜன் அவர்கள் ‘டீ.. டீ.. டீ..’ என்று தேநீர் பற்றி ஒரு நகைச்சுவைப் பாடலை டணால் தங்கவேலு அவர்களுக்காக பாடியிருப்பார். மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எழுதிய அந்த பாடலில் டீ பலருக்கு உணவாகவும் உணர்ச்சியாகவும் உள்ளதாக எழுதியிருப்பார்.
அது கச்சிதமாக காபிக்கும் பொருந்தும். அந்த வகையில் காபி அனுபவத்தை கலக்கலாய் சிறக்க வைக்கும் தாய்க்குலங்கள் நிறைந்த எங்கள் வீடு, கொடுத்து வைத்ததே! பிரேசிலில் ஜாய்ன் வில்லியில் என் மகள் வைஷ்ணவி  தரும் பிரேசில் கட்டாங்காபியும், அமெரிக்காவில் என் சகோதரி ஞானவல்லி Sale-ல் வகை வகையான காபிகளை வாங்கி basement – பாதாள அறையில் பூஜை அறையுடன் சேகரித்து வைத்துவிட்டு குடிப்பதையும் சொல்ல மறந்து விட்டேனே!! அதுவும் சிறப்புத்தான்!
எனதருமைத் தாயார் சுலோச்சனாம்மா அவர்களின் காபியை கவிவேந்தர் வாலி முதல் கடம் வித்வான் பெரியவர் ஆலங்குடி ராமச்சந்தின் போன்ற பல பெரியவர்கள் ‘சீர்காழி பாட்டைப்போல சுருதி சுத்தம்’ என்று சொல்வதும், எங்கள் வீட்டிற்குள் நுழையும்போதே “அண்ணி, எனக்கு சூடாகக் காபி வேணும்” என்று உரிமையுடன் குரல் கொடுப்பதும் வழக்கம். இன்றும் என் மனைவி சாந்தி மீனாட்சி காலை வேளைகளில் போடுகிற காபிக்கு, மெரினா பீச்சில் என்னோடு வாக்கிங் நடை மற்றும் யோகா பயிற்சி செய்யும் நண்பர்கள் ரசிகர்களாகவே மாறிவிட்டார்கள்.
எனக்கும் இந்த மாலை 4.30 மணிக்கு காபி வராவிட்டால் ஏதோ ஒன்று குறைந்தது போன்ற உணர்வு ஏற்படும். அதை எங்கள் வீட்டு மருமகளாக வந்த நாள் முதல் உணர்ந்துகொண்ட என் இனிய பட்டதாரி மருமகள் நிவேதா சந்தோஷ்முருகன் தரும் சூடான டிகிரி காபி, ஒரு பட்டம் வாங்கிவிட்ட திருப்தியை தரும். எனது இளைய மருமகள் ஐஸ்வர்யா வருண்கோவிந்த் அவர்கள் வீட்டிற்கு பெண் பார்க்க சென்ற அன்று கொடுத்த சூடான காபியிலேயே வெற்றி பெற்றுவிட்டார். உணவுக்கு நிகரான காபிக்குப் பஞ்சமில்லை!
இன்றைய காலப்போக்கில் சற்று சிந்தித்தால், மனிதன் டாஸ்மாக் சரக்கு இல்லாமல் கூட இருப்பான். பழகிய காபி இல்லாமல் இருக்கவே முடியாது!!
அன்பன்,
டாக்டர் சீர்காழி கோ. சிவசிதம்பரம் எம்.டி