வெறும் தரவுகளை நம்பி மோசம் போனதா காங்கிரஸ்?

--

புதுடெல்லி: நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில், தரவு ஆய்வுப் பிரிவை அதிகம் நம்பி, அதனடிப்படையில் முக்கிய முடிவுகளை மேற்கொண்டு, காங்கிரஸ் கட்சி மோசமான தோல்வியை சந்தித்துள்ளது என்று தெரியவந்துள்ளது.

தேர்தல் தோல்விக்கான காரணங்களை அக்கட்சி ஆராய்ந்து வரும் நிலையில், முதற்கட்ட விசாரணையின் அடிப்படையில் இந்த உண்மை வெளிவந்துள்ளது.

ரஃபேல் ஊழல் விவகாரத்தை மையப்படுத்தியது, நியாய் திட்டத்தை பெரிதாக முன்வைத்தது உள்ளிட்ட முடிவுகள் தரவுகள் ஆய்வுப் பிரிவின் ஆலோசனையின்படியே எடுக்கப்பட்டன. இது எதார்த்த நிலைக்கு உதவுவதாக இல்லை. மேலும், இதனடிப்படையில் பல மாநிலங்களில் வேட்பாளர் தேர்வும் நடைபெற்றது.

தரவுகள் ஆய்வுப் பிரிவு என்பது கருத்துக்களை சேகரிக்கும் ஒரு கருவிதானே ஒழிய, அதுவொரு முடிவெடுக்கும் சாதனமாக இருக்க முடியாது என்று சில காங்கிரஸ் தலைவர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தரவுகள் ஆய்வு பிரிவினுடைய ஆலோசனையின் அடிப்படையில்தான், கடந்த 2018 தெலுங்கானா சட்டமன்ற தேர்தலில், தெலுங்கு தேசத்துடன் கூட்டணி சேரும் மிகவும் தவறான முடிவு எடுக்கப்பட்டது.

காங்கிரஸ் தலைமை, தரவுகள் சேகரிப்பு பிரிவை மிகவும் அளவுக்கதிகமாக தேவையின்றி நம்பியது. பாரதீய ஜனதாவின் திட்டங்களையும் செயல்பாடுகளையும் மிகச்சரியாக புரிந்துகொண்டு, அதற்கேற்ப பதில் நடவடிக்கை எடுத்திருந்தால் இவ்வளவு பெரிய மோசமான தோல்வி ஏற்பட்டிருக்காது என்றே அந்தக் கட்சியின் பெயர் வெளியிட விரும்பாத சில தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.