சென்னை: வெற்றி பெறும் வாய்ப்பை வைத்துதான் கூட்டணி கட்சிக்கு இடம் ஒதுக்குவதை கணிப்பார்கள் என்று முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு 25 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு தொகுதிப் பங்கீட்டு ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகியுள்ளது. பல நாட்களாக திமுக, காங்கிரஸ் இடையே தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடர்ந்து நீடித்து வந்தது.

பல்வேறு கட்டங்களாக தனித்தனியே காங்கிரஸ் நிர்வாகிகள் திமுகவுடனான தொகுதிப் பங்கீடு குறித்து ஆலோசனை மேற்கொண்டு வந்தனர். திமுக -காங்கிரஸ் கூட்டணியில் காங்கிரசுக்கு, கன்னியாகுமரி மக்களவை தொகுதி உள்ளிட்ட 25 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு தற்போது கையெழுத்தாகி உள்ளது.

இந் நிலையில் திமுக-காங்கிரஸ் கூட்டணியில் சீட் குறைக்கப்பட்டுள்ளதற்கு காங்கிரஸ் கட்சியின் தவறே காரணம் என முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறியிருப்பதாவது:

கடந்த காலங்களில் 60 சீட் தந்தும் சில இடங்களில் மட்டுமே வெல்ல முடிந்தது. அதனால் காங்கிரஸ் கட்சிக்கு தொகுதிகள் குறைவாக ஒதுக்கப்பட்டுள்ளது. வெற்றி பெறும் வாய்ப்பை வைத்துதான் கூட்டணி கட்சிக்கு இடம் ஒதுக்குவதை கணிப்பார்கள் என்று ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.