சென்னை:

கொட நாடு விவகாரம் தொடர்பான தெஹல்கா ஊடகவியலாளரின்  வீடியோ வெளியான நிலையில், அதுகுறித்து பதில் அளிக்காமல், டிவி தினகரன்  மவுனம் காப்பது ஏன் என்று திவாகரன் கேள்வி எழுப்பி உள்ளார்.

ஜெ.மறைவை தொடர்ந்து அவரது கொடநாடு எஸ்டேட்டில் கொலை, கொள்ளை நடைபெற்றது. இது தொடர்பான விசாரணை நிலுவையில் உள்ள நிலையில், இதில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, டிடிவி தினகரன் போன்றோருக்கு தொடர்பு இருப்பதாக தெஹல்கா ஊடவியலாளர் வெளியிட்டுள்ள வீடியோவில் தெரிவித்து இருந்தார்.

இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், இதற்கும், தனக் கும் தொடர்பு இல்லை என்று மறுத்த முதல்வர், இதுகுறித்து காவல்துறை விசாரிக் கும் என்று கூறி உள்ளார்.

இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த திவாகரன், ஜெ.மரணம் தொடர்பாக ஆணையத்தின் முடிவில் தெரியவரும் என்றவர்,  கொடநாடு கொலை விவகாரம் குறித்து முதல்வர், அமைச்சர் ஜெயக்குமார் மறுத்துள்ளனர் என்றும் கூறினார்.

இந்த விவகாரத்தில், அனைத்துக்கும் முந்திரிக்கொட்டை போல் முந்திக்கொண்டு பதிலளிக்கும் டிடிவி தினகரன்,கொடநாடு கொலை-கொள்ளை விவகாரத்தில் அமைதி காப்பது ஏன் என்று தெரியவில்லை எனவும் கேள்வி எழுப்பினார்.

ஒரு வேளை வீடியோ வெளியான அதிர்ச்சியில் கூட டிடிவி தினகரன் இருக்கலாம் என்றவர்,  ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் 20 ரூபாய் டோக்கன் கொடுத்து தான் தினகரன் வெற்றி பெற்றதாகவும் தெரிவித்தார்.

அப்போலோவில் ஜெ. சிகிச்சை பெற்றபோது ஏற்பட்ட சாப்பாட்டு செலவு குறித்த கேள்விக்கு,  அப்பல்லோவில் அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், அதிகாரிகள் உள்பட  ஏராளமானோர்  சாப்பிட்டனர் என்றும் தெரிவித்தார்.