மோடி பிரதமரான பின் அண்டை நாடுகளுடன் உறவு சீர்குலைந்தது ஏன்? ராஜஸ்தான் முதல்வர் கெலாட் கேள்வி

ஜெய்ப்பூர்: பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்தபின் அண்டை நாடுகளுடன் நம் நாடு வைத்திருந்த உறவு மோசமடைய காரணம் என்ன என்று ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் கேள்வி எழுப்பியுள்ளார்.

கிழக்கு லடாக்கில் கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய, சீன ராணுவத்துக்கு இடையேயான மோதலில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். கல்வான் பள்ளத்தாக்கு தங்களுக்கே சொந்தம் என்று சீனா உரிமை கொண்டாட இந்தியா அதை மறுத்து வருகிறது.

எல்லையை சீனா ஆக்கிரமித்துள்ளதை தடுக்க மத்திய அரசு தவறிவிட்டது என்று காங்கிரஸ் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. ஆனால் இதற்கு மத்திய அரசு தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருகிறது.

இந்நிலையில் ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் ட்விட்டரில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது: கிழக்கு லடாக் எல்லைப் பிரச்சினையில் இந்திய, சீன ராணுவத்துக்கு இடையே என்ன நடந்தது? ஏன் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தார்கள்?

இது பற்றி தெளிவான அறிக்கையு இல்லை. இப்போது இருக்கும் குழப்பத்தை பிரதமர் மோடி மக்களுக்கு விளக்க வேண்டும்.2014ம் ஆண்டு மத்தியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக்கு வந்தது.

பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்தபின் நம்முடைய அண்டை நாடுகளுடன் நாம் வைத்திருந்த உறவு மோசமடைந்துவிட்டது. என்ன காரணம்? பிரதமராக மோடி பதவி ஏற்றபின், அண்டை நாடுகளின் தலைவர்கள் இந்தியாவுக்கு அழைக்கப்பட, அவர்களும் வருகை தந்தனர்.

ஆனால், இப்போது இலங்கை, நேபாளம், சீனா, பாகிஸ்தான் ஆகியவற்றுடன் நமது நட்புறவு திடீரென மோசமடைகிறதே? காரணம் என்ன? சீனாவுடன் என்ன நடந்தது என்பது இன்னும் புதிராகவே இருக்கிறது.

20 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தது குறித்து மக்களுக்கு பிரதமர் மோடி விளக்க வேண்டும். ஆனால், இதுவரை மத்திய அரசு சார்பில் எந்தவித உரிய விளக்கம் இல்லை. இன்றில்லாவிட்டாலும் நாளை பிரதமர் மோடி மக்களுக்கு உண்மையைக் கூறுவார். இந்த அரசு எதை மறைக்க முயல்கிறது? என்று கேள்வி எழுப்பி உள்ளார்.