Random image

‘பாஜக ஒழிக’ கோஷமிட்ட சோபியாவை கைது செய்த காவல்துறை எச்.ராஜாவை ஏன் கைது செய்யவில்லை? கி.வீரமணி

சென்னை:

பாசிச பாஜக ஒழிக என விமானத்தில் கோஷமிட்ட சோபியாவை உடனடியாக கைது செய்த காவல்துறை எச்..ராஜாவை இதுவரை கைது செய்யாதது ஏன் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கேள்வி எழுப்பி உள்ளார்.

தந்தை பெரியாரின் 140வது  பிறந்த நாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதை முன்னிட்டு சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் திராவிட கழகத் தலைவர் கி.வீரமணி மற்றும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் பொது செயலாளர் வைகோ உள்பட பலர் பெரியார் சிலைக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கி.வீரமணி, தூத்துக்குடி விமானத்தில், பாசிச பாஜக ஒழிக என முழக்க மிட்ட சோபியாவை உடனடியாக கைது செய்த காவல்துறையினர், நீதிமன்றத்தையும், காவல்துறையினரை யும் அவதூறாக பேசிய எச்.ராஜாவை இன்னும் கைது செய்யாமல் இருப்பது ஏன் என்று கேள்வி எழுப்பினார்.

மேலும், அண்ணாசாலையில் உள்ள சிம்சனில் உள்ள பெரியார் சிலை மீது செருப்பு வீசப்பட்டுள்ளது. பெரியார் சிலை மீது செருப்பு வீசுவதால் பெரியாருக்கு அவமரியாதை ஏற்படாது என்றவர்,  இந்த சலசலப்புக்கெல்லாம் நாங்கள் அஞ்சமாட்டோம்.

ஒரு செருப்பை தூக்கிபோட்டால் மற்றொரு செருப்பு எங்கே என கேட்டவர் பெரியார் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த விவகாரங்களுக்கு எல்லாம் மக்கள் பதிலளிக்க தொடங்கும் முன் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கி.வீரமணி வலியுறுத்தினார்.