வேளாண் துறையில் பெரு நிறுவனங்களின் பங்கு என்ன அதை அவர்கள் கைப்பற்ற துடிப்பது ஏன் என்பது குறித்து டவுன்-டு-எர்த் அமைப்பு ஓர் ஆய்வு நடத்தியுள்ளது. அதில் கூறப்பட்டிருக்கும் தகவல்கள் :

இந்திய உணவு மற்றும் மளிகை, சிறு வணிகம் உலகளவில் மூன்றாவது மிகப்பெரிய சந்தை.

இதில் ஆண்டொன்றுக்கு சுமார் 36.50 லட்சம் கோடி ரூபாய் வர்த்தகம் நடைபெறுகிறது.

தற்போது இந்த சில்லறை வியாபாரத்தில் 98 சதவீதம் தனிநபர் நடத்தும் தெருமுனை கடைகளாகவே உள்ளது.

சூப்பர் மார்க்கெட்டுகளின் பங்கு இரண்டு சதவீதம் மட்டுமே. 2019 ஆய்வின் படி 2020ல் இது இருமடங்காக, அதாவது 4 சதவீதமாக உயரும் என்று சொல்லப்பட்டது.

சில புள்ளிவிவரங்கள் 2023ம் ஆண்டு இந்திய சில்லறை வணிகம் 60 சதவீத வளர்ச்சியடைந்து 58.5 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு வர்த்தகம் நடக்கும் என்று கூறுகிறது.

அமெரிக்க முதலாளிகளுக்கு உலக சந்தை நிலவரம் குறித்த விவரங்களை வழங்கும் அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகதுறை இதுபோன்ற புள்ளிவிவரங்களை அவ்வப்போது வழங்குகிறது.

மேலும் அமெரிக்க முதலாளிகளை இந்திய உணவு மற்றும் தானிய உற்பத்தி துறையில் உள்ள வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்ள இது வழிகாட்டுகிறது. ரிலையன்ஸ் நிறுவனம் இந்திய விவசாய சந்தையில் தனது முதலீட்டை அதிகரித்து வருவதாக அந்த அறிக்கையில் அது தெரிவித்துள்ளது.

இந்திய ஆன்லைன் வர்த்தகம் கடந்த சில ஆண்டுகளாக வளர்ச்சியடைந்து வருகிறது. உணவு மற்றும் மளிகை வணிகத்தில் ஆரம்பத்தில் இருந்ததைவிட இப்போது பலமடங்கு வர்த்தகம் அதிகரித்திருக்கிறது.

கொரோனா கால ஊரடங்கிற்கு பின் 73 சதவித வளர்ச்சி அடைந்திருப்பதாக செப்டம்பர் 2020ல் எடுக்கப்பட்ட புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.

காய்கறி, பழங்கள் வாங்குவது 144 சதவீத வளர்ச்சியும், பருப்பு, எண்ணெய், மாவு வகைகள் 150 சதவீத வளர்ச்சியையும் கண்டிருக்கிறது.

ஆன்லைன் வணிகத்தில் ஏற்பட்டிருக்கும் வளர்ச்சி பல பெரு நிறுவனங்கள் மற்றும் முதலாளிகளின் கவனத்தை ஈர்த்திருக்கிறது.

2019ல் ஆன்லைன் மளிகை வர்த்தகம் 14000 கோடி ரூபாயாக இருந்தது இது 2024ல் சுமார் பத்து மடங்கு அதிகரித்து 1,32,000 கோடி ரூபாய் அளவுக்கு இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ப்ளிப்கார்ட், அமேசான், ஸ்விகி, ஜொமேட்டோ, டன்சோ போன்ற நிறுவனங்கள் இதனால் பலனடையும்.

இருந்தபோதும், ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு இது மிகப்பெரிய வாய்ப்பாக அமையும். இந்நிறுவனம் சமீபத்தில் பேஸ்புக் நிறுவனத்துடன் இணைந்திருப்பதோடு, ப்யூச்சர் குழும பங்குகளையும்  வாங்கியிருக்கிறது.

அமெரிக்க வேளாண் துறையின் 2018ம் ஆண்டு அறிக்கையின்படி இந்திய உணவு பதப்படுத்தும் தொழில் முதலீடு, பன்மடங்கு உயரும் என்று தெரிவித்துள்ளது, 2024ல் உணவு மற்றும் பானங்கள் உற்பத்தி துறையில் 2,40,000 கோடி ரூபாய் முதலீடு செய்யப்படும் என்று கூறியுள்ளது.

நெஸ்லே, பிரிட்டானியா, அமுல், பார்லே, ஹால்திராம், ஐ.டி.சி. ஆகிய நிறுவனங்கள் இந்திய உணவு தயாரிப்பு தொழிலில் முன்னோடி நிறுவனங்களாக விளங்குகிறது.

பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட உணவு பொருட்களின் விற்பனை இந்தியாவில் எந்தளவுக்கு வளர்ச்சியடைந்திருக்கிறது என்று அமெரிக்க வேளாண் துறை ஒர் அறிக்கையை வெளியிட்டுள்ளது.

2013ம் ஆண்டு அரிசி, நூடுல்ஸ், பாஸ்டா போன்றவை 19.25 லட்சம் டன்னும், 2017ம் ஆண்டு 64 சதம் அதிகரித்து 31.49 லட்சம் டன்னாக இருந்தது.

சிற்றுண்டி உணவுவகைகள் 89 சதமும், எண்ணெய் வகைகள் 93, கடல் உணவு 77, உடனடி உணவுவகைகள் 74 சதமும் வளர்ச்சி அடைந்திருக்கிறது.

இந்தியாவில் விவாசய பொருட்களின் உற்பத்தி மற்றும் ஆன்லைன் வணிகத்தில் உள்ள வாய்ப்புகளை இந்த ஆய்வறிக்கைகள் உணர்த்துவதாக உள்ளது.

மேலும், வேளான் சடடங்கள் இந்த வாய்ப்பை இன்னும் விரைவாக வழங்க உதவும் என்று நம்பப்படுகிறது.

அதிகரித்து வரும் இரு நிறுவனங்களின் ஆதிக்கம்

வேளான் சட்டங்களால் அதானி மற்றும் ரிலையன்ஸ் நிறுவனங்களுக்கு தான் லாபம் என்பதை மறுத்துவரும் இவ்விரு நிறுவனங்கள், கடந்த சில ஆண்டுகளில் உணவு மற்றும் சில்லறை வணிகத்தில் செய்திருக்கும் முதலீடுகளை வைத்து பார்க்கும் போது யாருக்கு லாபம் என்று புலப்படும்.

சிங்கப்பூரை சேர்ந்த வில்மர் நிறுவனத்துடன் இணைந்து அதானி குழுமம் துவங்கியிருக்கும் அதானி வில்மர் லிமிடெட் நிறுவனம் தயாரிக்கும் சமையல் எண்ணெய் விற்பனை மொத்த சமையல் எண்ணெய் விற்பனையில் 20 சதவீதம்.

பார்ச்யூன் – சோயாபீன், சூரியகாந்தி, பருத்தி எண்ணெய் என்று ஆரம்பித்த இந்நிறுவனம் இப்போது, பருப்பு, சர்க்கரை, பாஸ்மதி அரிசி, கோதுமை மாவு, இன்ஸடன்ட் வகைகள் என்று தனது தயாரிப்புகளை விரிவுபடுத்தியிருக்கிறது.

இவை தவிர இமாச்சல் பிரதேசில் இருந்து ஆப்பிள்களை வாங்கி விற்கிறது.

அதேவேளையில், ரிலையன்ஸ் நிறுவனம் 2006ம் ஆண்டு துவங்கிய தனது சில்லறை வணிக நிறுவனமான ரிலையன்ஸ் பிரஷ் நாடு முழுதும்  797 கடைகளை அமைத்துள்ளது.

இந்நிறுவனம் நாளொன்றுக்கு 200 டன் பழங்கள் மற்றும் 300 டன் காய்கறிகளை விற்பனை செய்வதாக தனது வலைதளத்தில் பதிவிட்டுள்ளது.

விவசாயிகளிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்து விற்பனை செய்துவரும் ரிலையன்ஸ், இதற்காக பிரத்யேக செயலி ஒன்றை விரைவில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.

யாருக்கு பலன், யாருக்கு இழப்பு

ஓப்பந்த முறையில் விவசாயம் செய்வது விவசாயிகளுக்கு கவலையளிப்பதாக உள்ளது.

இந்தியாவில் ஒப்பந்த விவசாயம் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேல் உள்ளது என்று அகமதாபாத்தில் உள்ள இந்திய மேலாண்மை கல்வி நிலைய பேராசிரியர் சுக்பால் சிங் இது குறித்து கூறுகிறார்.

பஞ்சாப் மற்றும் ஹரியானாவை சேர்ந்த பல விவசாயிகள் இதனால் பலனடைந்துள்ளனர் இருந்தபோதும் இதனால் அனைத்து விவசாயிகளுக்கும் நன்மை ஏற்படுமா என்பதை உறுதியாக கூறமுடியாது என்றும் தெரிவித்தார்.

ஒப்பந்த விவசாயம் செய்ய பாசன வசதியுடன் குறைந்தது  5 ஏக்கர் நிலமாவது வேண்டும், இது அனைவருக்கும் சாத்தியமில்லை.

அதுதவிர, எழுதிவாங்கப்பட்ட ஒப்பந்தம் நடைமுறையில் உள்ளது, பெரும்பாலான விவசாயிகளுக்கு எழுத படிக்க தெரியாதது ஒரு குறையாக உள்ளது.

இருந்தபோதும், ஒப்பந்த விவசாயம் சிறு விவசாயிகளுக்கு பலனளிக்கப் போவதில்லை என்பது தெளிவாக தெரிகிறது. போட்டி காரணமாக தங்கள் நிலங்களை விற்க வேண்டிய நிர்பந்ததிற்கு தள்ளப்படுவார்கள் என்பதே அவர்களின் முக்கிய கவலையாக உள்ளது.

பெரு நிறுவனங்களின் திட்டங்கள்

மத்திய தொழில் மற்றும் வணிக துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்திய பிரான்ட் ஈக்விட்டி பவுன்டேஷன் அறிக்கையின்படி :

    • அமேசான் நிறுவனம் அடுத்த 5 ஆண்டுகளில் 3700 கோடி ரூபாய் முதலீடு செய்யவுள்ளது
    • பார்லே அக்ரோ நிறுவனம் தனது ஆண்டு வருமானத்தை 2800 கோடி ரூபாயிலிருந்து 5000 கோடி ரூபாயாக அதிகரிக்க திட்டமட்டுள்ளது.
    • அமெரிக்க நிறுவனமான கார்கில் இன்கார்பரேஷன் 8 லட்சம் சில்லறை விற்பனை நிலையங்களை திறக்க திட்டமிட்டுள்ளதோடு, சமையல் எண்ணெய் உற்பத்தியிலும் ஈடுபட இருக்கிறது.
    • நெஸ்லே இந்திய நிறுவனம் குஜராத்தில் 700 கோடி ரூபாய்  முதலீட்டில் புதிய ஆலையை நிறுவுகிறது
    • ஹால்திராம் நிறுவனம் அமேசான் நிறுவனத்துன் 2019ம் ஆண்டு கைகோர்த்திருக்கிறது.
    • கோகோ கோலா நிறுவனம் புதிதாக பழரச பானங்களை அறிமுகப்படுத்தியிருக்கிறது
    • நவம்பர் 2020ல் ஹிந்துஸ்தான் யூனிலிவர் நிறுவனம் புதிதாக நேச்சர் புரொடெக்ட் என்ற தயாரிப்பை  அறிமுகப்படுத்தியுள்ளது
    • செப்டம்பர் 2020ல் அமெரிக்க நிறுவனமான சில்வர் லேக் நிறுவனம் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்தில் 7500 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது.
    • ஏற்கனவே இந்நிறுவனம் ஜியோவின் ஆன்லைன் வணிக நிறுவனத்தில் 5600 கோடி ரூபாய் முதலீடு செய்திருப்பது குறிப்பிடதக்கது.

விவசாய உற்பத்தி பொருட்களை நேரடி கொள்முதல் செய்து சில்லறை வணிகத்திலும், மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை தயாரிப்பதிலும் முனைப்பு காட்டும் இந்நிறுவனங்கள் இயற்கையை மீறி எதுவும் செய்யமுடியாது என்ற போதும், 36.5 லட்சம் கோடி ரூபாய் புழங்கும் சில்லறை வர்த்தகத்தில் வெறும் இரண்டு சதவீத வர்த்தகம் மட்டுமே உள்ள நிலையில் அதனை மேலும் பல மடங்கு அதிகரிக்கவும், பொருட்களின் மீது விலையேற்றம் செய்து லாபமீட்டவும் முனைப்பு காட்டி வருகின்றன என்பது மட்டும் புலப்படுகிறது.

– நன்றி : டவுன்-டு-எர்த்