சென்னை,

ஜெயலலிதா எனது தாய் என்று அறிவிக்க வேண்டும் என்றும், அதற்காக அவரது உடலை தோண்டியெடுத்து டிஎன்ஏ பரிசோதனை நடத்த வேண்டும் என்று பெங்களூரை சேர்ந்த மஞ்சுளா என்ற அமர்ருதா சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

ஏற்கனவே உச்சநீதி மன்றம் இந்த வழக்கை நிராகரித்த நிலையில், நேற்று சென்னை ஐகோர்ட்டில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்றது.

தொடர்ந்து இன்று நடைபெற்ற விசாரணையின்போது, நீதிபதி பல கேள்விகளை எழுப்பி உள்ளார்.

விசாரணையின்போது,  ஜெயலலிதா சிகிச்சை பெற்ற அப்பல்லோ மருத்துவமனையில்,  ஜெயலலிதாவின் ரத்த மாதிரி  இருக்கிறதா? என்று கேள்வி எழுப்பினார். ஏனென்றால்,  ஜெயலலிதாவின் உடலைத் தோண்டி எடுத்து டிஎன்ஏ.,  சோதனை நடத்த வேண்டும் என்று அம்ருதா கோரியிருப்பதால்,  அதற்கு முன்னதாக, மருத்துவ மனையில் ஜெயலலிதாவின் ரத்த மாதிரிகளை வைத்திருக்கிறார்களா என்று அறிய விரும்புவதாக நீதிபதி தெரிவித்தார்.

மேலும், ஜெயலலிதாவை அம்மா என்று உரிமை கோரும் அம்ருதா, சோபன்பாபுவை அப்பா என்று உரிமை கோராதது ஏன் என்றும், அதை கூற எது தடுக்கிறது என்றும் கேள்வி எழுப்பினார்.

அதைத்தொடர்ந்து நடைபெற்ற விசாரணையின்போது,  ஜெயலலிதாவை அம்மா என்று உரிமை கோரும் விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும், ஜெயலலிதா குறித்த சர்ச்சைகளுக்கு முற்றுப் புள்ளி வைத்தாக வேண்டும் என்று கூறினார்.

ஜெயலலிதா  உயிருடன் உள்ளபோது அவரை  அம்மா என்று அழைத்தவர்கள், அவர்  இறந்ததும் தற்போது ஜெயலலிதா என்கிறார்கள். இது  வேதனை தருகிறது என்று தெரிவித்த நீதிபதி, காலையில் மாலை அணிவித்து, மாலையில் காலை வாரும் நிலைமை உள்ளதாகவும்,  தமிழகத்தின் தலையெழுத்து இது என்றும் குறிப்பிட்டார்.

ஜெயலலிதா மகள் என்று கோரி அம்ருதா தொடர்ந்துள்ள வழக்கு விசாரணைக்கு ஏற்றதா என்று பதிலளிக்கக் கோரி தலைமை செயலாளர், சென்னை காவல்துறை ஆணையர் பதிலளிக்க வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதி வழக்கை ஜனவரி 5ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்

இந்த வழக்கில், அம்ருதா சார்பில் ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் வாதாடிய  மூத்த வழக்கறிஞர் பிரகாஷ் ஆஜராகி வாதிட்டது குறிப்பிடத்தக்கது.